search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிஎன்பிஎஸ்சி
    X
    டிஎன்பிஎஸ்சி

    டிஎன்பிஎஸ்சி முறைகேடு: விடைத்தாள்களை திருத்தியது எப்படி?- ஜெயக்குமார் வாக்குமூலம்

    டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் விடைத்தாள்களை திருத்தியது எப்படி? என்பது பற்றி ஜெயக்குமார் மீண்டும் பரபரப்பு வாக்குமூலம் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சென்னை:

    குரூப்-4 தேர்வு மற்றும் குரூப்-2 தேர்வு முறைகேடு, கிராம நிர்வாக அதிகாரி தேர்வில் நடந்த மோசடி தொடர்பாக சென்னை முகப்பேரை சேர்ந்த தரகர் ஜெயக்குமாரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தரகர் ஜெயக்குமார், டி.என்.பி.எஸ்.சி. ஊழியர் ஓம்காந்தன் இருவரும் சேர்ந்து தேர்வு முறைகேடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளனர்.

    இது தொடர்பாக முழுமையான தகவல்களை திரட்டுவதற்காக ஜெயக்குமார், ஓம்காந்தன் இருவரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஏற்கனவே காவலில் எடுத்து விசாரணை நடத்தி உள்ளனர்.

    இந்த விசாரணை முடிந்து சிறையில் அடைக்கப்பட்ட ஜெயக்குமாரை மீண்டும் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து கடந்த 19-ந் தேதி ஜெயக்குமாரை போலீசார் மீண்டும் காவலில் எடுத்தனர். தேர்வு முறைகேடுகள் பற்றி விசாரணை நடத்துவதற்காக ஜெயக்குமாரை கீழக்கரை, ராமேஸ்வரம் மையங்களுக்கு போலீசார் மீண்டும் அழைத்துச்சென்றனர்.

    அப்போது விடைத்தாள்களை திருத்தியது எப்படி? என்பது பற்றி ஜெயக்குமார் மீண்டும் பரபரப்பு வாக்குமூலம் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    தேர்வு மையங்களில் இருந்து விடைத்தாள்களை எடுத்து வரும்போது அதனை திருத்தி கொள்ளலாம் என்கிற திட்டத்தை ஓம்காந்தனே வகுத்து கொடுத்தார்.

    அவரது ஆலோசனையின் பேரிலேயே ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் இருந்து விடைத்தாள்களை காரில் எடுத்து வந்த போது மேல் மருவத்தூர் அருகே வைத்து திருத்தினோம்.

    அழியும் மை ஊற்றப்பட்ட பேனாவை தேர்வு மையங்களில் பயன்படுத்தி சிலரை தேர்வு எழுத சொன்னோம். அனைத்து கேள்விகளுக்கும் பதில் எழுதாமல் குறைவான கேள்விகளுக்கு மட்டுமே தேர்வு எழுதுவது என்கிற இன்னொரு குறுக்கு வழியையும் பயன்படுத்தினோம்.

    இதையடுத்து விடை எழுதப்படாத கேள்விகளுக்கு நாங்களே விடையை எழுதினோம். இதற்காக பணம் கொடுத்தவர்களின் பேப்பர் பண்டலை உடைத்து விடைத்தாள்களை திருத்தி மோசடி செய்தோம்.

    கார் டிரைவர்கள் பலர் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்துள்ளனர். விடைத்தாள்களின் முழு பொறுப்பும் ஓம்காந்தனிடம் இருந்ததால் மோசடி செய்வதற்கு அது உதவியாகவே இருந்தது.

    இவ்வாறு ஜெயக்குமார் வாக்குமூலம் அளித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    Next Story
    ×