search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசு
    X
    தமிழக அரசு

    கடலூர், நாகை மாவட்டத்தில் பெட்ரோலியம்- ரசாயன மண்டலம் ரத்து: தமிழக அரசாணை வெளியீடு

    தமிழக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் பாதுகாப்பு மண்டல மசோதா இன்று அதிகாரப்பூர்வமாக தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டது.
    சென்னை:

    தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாப்பதற்காக, “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்” ஆக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவித்தார்.

    இது டெல்டா பாசன பகுதி விவசாயிகளிடம் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதல்-அமைச்சரின் உத்தரவு காரணமாக காவிரி டெல்டா பாசன பகுதிகளை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் வழிவகை ஏற்பட்டுள்ளது.

    காவிரி வேளாண் பாதுகாப்பு மண்டலத்தை உறுதிப்படுத்துவதற்காக நேற்று முன்தினம் சட்டசபையில் சட்ட மசோதா கொண்டு வந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார். அந்த மசோதா ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

    அந்த மசோதாவில் காவிரி டெல்டா மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக வருகின்றன என்ற விவரம் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும்  தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அமைப்பு என்ற பெயரில் ஒரு அதிகார அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது.

    இது தவிர பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியில் சட்டத்தை மீறி தொழில் தொடங்கினால் தண்டனை வழங்குவதற்கும் சட்ட மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தமிழக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் பாதுகாப்பு மண்டல மசோதா இன்று அதிகாரப்பூர்வமாக தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டது.

    அதோடு நாகை, கடலூர் மாவட்டங்களில் பெட்ரோலிய மண்டலம் அமைக்க வழங்கப்பட்ட அரசாணையை ரத்து செய்தும் அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வீட்டு வசதி ஊரக மேம்பாட்டுத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கை வருமாறு:-

    நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள 45 கிராமங்களில், “பெட்ரோலியம், ரசாயனம் மற்றும் பெட்ரோலிய ரசாயன முதலீட்டு மண்டலம்” அமைப்பதற்கு தமிழ்நாடு நகர மற்றும் திட்ட சட்டத்தின் கீழ் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

    அந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என டெல்டா பாசன பகுதி மக்கள் கருத்து தெரிவித்தனர். பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று பெட்ரோலியம்- ரசாயன மண்டலம் அமைக்க வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுகிறது.

    கடலூர், நாகை மாவட்ட கலெக்டர்கள் இந்த அனுமதி ரத்து நடவடிக்கையை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பான தகவல்களை அரசுக்கு தெரிவிக்கவும் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து இன்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

    கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய, ரசாயன முதலீட்டு மண்டலம் அமைப்பது தொடர்பான அரசு அசாரணையை தமிழக அரசு கடந்த 2017-ம் ஆண்டு வெளியிட்டு இருந்தது. இதன் மூலம் 45 கிராமங்களில் 57,500 ஏக்கர் நிலத்தை பெட்ரோலிய மண்டலமாக்க வழிவகை செய்யப்பட்டு இருந்தது.

    இதற்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு ஏற்பட்டது. காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மேம்படுத்த வேண்டுமானால் பெட்ரோலிய மண்டலத்துக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்தனர்.

    இதை ஏற்று நாகை, கடலூர் மாவட்டங்களில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்க பிறப்பித்த அரசாணையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.

    அரசின் இந்த அதிரடி நடவடிக்கை டெல்டா பகுதி விவசாயிகள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
    Next Story
    ×