search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசிய போது எடுத்த படம்.
    X
    விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசிய போது எடுத்த படம்.

    முதல் சத்துணவு கூடத்தை கட்டி கொடுத்தவர் சிவந்தி ஆதித்தனார்- முதலமைச்சர் புகழாரம்

    ஏழை எளிய குழந்தைகளுக்காக சத்துணவு திட்டத்தை தொடங்கியபோது, முதலில் தன் தந்தை பெயரில் முதல் சத்துணவுக் கூடத்தை கட்டிக் கொடுத்தவர் டாக்டர். சிவந்தி ஆதித்தனார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
    திருச்செந்தூர்:

    பா.சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபத்தை திறந்து வைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    சி.பா.ஆதித்தனார்- கோவிந்தம்மாள் தம்பதியருக்கு இரண்டாவது புதல்வராக 1936ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ந்தேதி மரியாதைக்குரிய டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தார். பள்ளிப்பருவத்தில் சென்னை, இராமகிருஷ்ணா உயர்நிலைப் பள்ளியில் படித்த டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் அவர்கள், பின்னர், மாநிலக் கல்லூரியில் தனது படிப்பைத் தொடர்ந்து, பி.ஏ. பட்டம் பெற்றார். கல்லூரியில் படிக்கும்போதே தேசிய மாணவர் படை (என்.சி.சி.) தளபதியாக இருந்ததுடன், சென்னை மாநகரில் உள்ள அனைத்துக் கல்லூரிகளின் என்.சி.சி. படைகளுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

    இவரது தந்தையார் திரு. சி.பா.ஆதித்தனார் அவர்கள், படிக்காத பாமர மக்கள் நாட்டு நடப்பை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உயரிய எண்ணத்தின் அடிப்படையில் 15.10.1942 அன்று, முதன் முதலாக மதுரையில் ‘அன்றைய செய்தியை அன்றே படியுங்கள்’ என்ற முழக்கத்துடன் ‘தந்தி’ என்ற பெயரில் நாளிதழ் ஒன்றினை தொடங்கினார்.

    பின்னர் இதுவே சென்னையில் ‘தினத்தந்தி’ என்ற பெயரில் தொடங்கினார். இதன் மூலம் தமிழ்நாட்டில் பத்திரிகை வாசிக்கும் பழக்கம் அதிகரிக்க வழிவகுத்தார்.

    ‘விளையும் பயிர் முளையிலே தெரியும்’ என்ற பழமொழி போல், திரு. சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் படிக்கும் பொழுது ஒரு நாள் தினத்தந்தியில் வெளியிட ஒரு சிரிப்பு துணுக்கு ஒன்றினை தன் தந்தையிடம் கொடுத்தார். அந்த சிரிப்பு துணுக்கு என்னவென்றால்,

    ஆசிரியர் மாணவரிடம் கேட்கிறார் பாம்பு என்று எழுதச் சொன்னால் ‘பம்பு’ என்று எழுதியிருக்கிறாயே?

    அதற்கு மாணவன், பாம்புக்குத் தான் கால் கிடையாதே சார் என்று பதில் கூறுகிறார்.

    தனது மகனின் பத்திரிகை ஆர்வத்தை உணர்ந்த திரு. சி.பா.ஆதித்தனார் அவர்கள் பத்திரிகைத் தொழிலில் தனது வாரிசாக அவரை உருவாக்கினார். 1958ஆம் ஆண்டு திரு. சிவந்தி ஆதித்தன் தனது பட்டப்படிப்பை முடித்தவுடன், அவரை அழைத்து பத்திரிகைத் துறையில் பயிற்சி அளித்தார்.

    “பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்
    அறிவூட்டும் தந்தை நல்வழி காட்டும் தலைவன்”

    என்ற புரட்சித் தலைவர் அவர்களின் பாடலுக்கேற்ப, அவரது தந்தையார், சிவந்தி ஆதித்தனுக்கு பயிற்சி அளித்தார். அச்சு கோர்ப்பாளராக, அச்சிடுபவராக, பார்சல் கட்டி அனுப்புவராக, நிருபராக, துணை ஆசிரியராக என்று பத்திரிகைத் துறையின் அத்தனை பிரிவுகளிலும் பயிற்சி கொடுத்தார்.

    பின்னர் திரு. சிவந்தி ஆதித்தன் அவர்கள் நெல்லைக்கு சென்று ‘மாலை முரசு’ பத்திரிகையை தொடங்கினார். அவரது அயராத உழைப்பினால் ‘மாலை முரசு’ நாளிதழ் நெல்லை மக்களின் பேராதரவைப் பெற்றது. இதன் எதிரொலியாக மற்ற மாவட்டங்களிலும் மாலை முரசுகள் தோன்றின.

    பத்திரிகையின் அனைத்து துறைகளிலும் கற்றுத் தேர்ந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்கள் ஆற்றிய பணியினை கண்ட அவரது தந்தையார், ‘தினத்தந்தி’யின் நிர்வாகப் பொறுப்பை 1959ஆம் ஆண்டு ஒப்படைத்தார். அச்சமயத்தில், சென்னை, மதுரை, திருச்சி ஆகிய மூன்று இடங்களில் இருந்து மட்டுமே தினத்தந்தி நாளிதழ் வெளிவந்து கொண்டிருந்தது.

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் நிர்வாகத் திறமையால், தினத்தந்தி நாளுக்கு நாள் வளர்ந்து, இப்போது பெங்களூர், மும்பை, புதுச்சேரி உள்பட 15 நகரங்களில் பதிப்பாகி வெற்றிகரமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த பெருமைக்குச் சொந்தக்காரர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்கள் தான் என்றால் அது மிகையாகாது.

    தினத்தந்தி வெள்ளி விழா நிகழ்ச்சியில் பங்கேற்று அன்று தலைமை உரையாற்றிய பேரறிஞர் அண்ணா அவர்கள் கீழ்கண்டவாறு குறிப்பிட்டார்.

    “ஓர் அமைப்பை தோற்றுவிப்பது என்பது கடினம். ஆனால் நல்ல முறையில் அமைந்த ஓர் அமைப்பினை யாரிடத்தில் ஒப்படைக்கிறோமோ, அவர்கள் அதில் ஒரு துளிகூட அக்கறை காட்டவில்லை என்றால், எவ்வளவு திறமையாக அந்த அமைப்பை அமைத்து இருந்தாலும், வெகு விரைவிலேயே அது கலைந்து விடக்கூடிய ஆபத்து உண்டு.

    அந்த விதமான நிலையில்லாமல் திரு. ஆதித்தனார் அவர்கள் அமைத்துக் கொடுத்த ‘தினத்தந்தி’ நல்ல முறையில் இன்னும் நல்ல வளர்ச்சி அடையத்தக்க வகையில், மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் விரும்பி படிக்கும் தன்மையிலேயே தினத்தந்தி நாளிதழ் இன்றைய தினம் நடக்கிறது என்றால், அதன் நிர்வாகப் பொறுப்பை ஏற்று நடத்திக் கொண்டிருக்கும் நம் மதிப்பிற்குரிய நண்பர் ஆதித்தினாரின் திருமகன் சிவந்தி ஆதித்தன் அவர்களுக்கு உரிய பங்கு உண்டு.

    டாக்டர் பா சிவந்தி ஆதித்தனார்


    ஆதித்தினார் ஒரு நல்ல அமைப்பை ஏற்படுத்திக் கொடுத்தது மட்டும் அல்லாமல், அந்த அமைப்பை தொடர்ந்து நடத்த தக்க பிள்ளையையும் பெற்றெடுத்தார் என்பது அவரது தனிச் சிறப்புக்கு எடுத்துக்காட்டாகும்” என்று, திரு. சிவந்தி ஆதித்தன் அவர்களை பாராட்டிப் பேசினார்கள்.

    இன்று தினத்தந்தி பத்திரிகை பல கோடி வாசகர்களுடன், நூற்றாண்டை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருப்பதை நினைத்துப் பார்த்தால் பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறியது நூற்றுக்கு நூறு சரியாக இருப்பதை உணர முடிகிறது.

    திரு. ஆதித்தனார் அவர்கள் அமைத்த நிறுவனங்களை அவருடைய மகன் திரு.சிவந்தி ஆதித்தன் கட்டிக்காத்து வருவதுடன், மெச்சத் தகுந்த வழியில் வளர்த்து வருகிறார்” என்றார் மாண்புமிகு புரட்சித் தலைவர் அவர்கள்.

    “தினத்தந்தி நாளிதழ் மூலம் தமிழகத்தில் பாமரரும், பத்திரிகை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியவர் டாக்டர் சிவந்தி ஆதித்தன் அவர்கள். இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரரும் ஆவார். இவர் எனது முந்தைய ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவராக திறம்பட பணியாற்றியது மிகவும் குறிப்பிடத்தக்கது. இவர் எளிமையானவர் மற்றும் பழகுவதற்கு இனிமையானவர்” என்றார் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.

    தினத்தந்தி பத்திரிகை மட்டுமின்றி, 1962ஆம் ஆண்டு ‘ராணி’ வார இதழ் தொடங்கப்பட்டது. திரு. ஆதித்தனார் அவர்கள் பாமர மக்களையும், நாளிதழ் படிக்க வைத்தார் என்றால், பட்டி தொட்டி மக்களிடம் வார இதழ் படிக்கும் பழக்கத்தை திரு. சிவந்தி ஆதித்தன் அவர்கள் பரப்பினார். இதனைத் தொடர்ந்து ‘ராணி முத்து’, ‘ராணி காமிக்ஸ்’ ஆகிய இதழ்களையும் தொடங்கினார்கள். இன்று தமிழ்நாடு மக்களின் வீடுகளை அழகுபடுத்திக் கொண்டிருக்கும் ‘ராணி முத்து’ காலண்டர்களை வெளியிட்டவரும் திரு. சிவந்தி ஆதித்தன் அவர்கள்தான்.

    இவர் திருச்செந்தூர் பகுதியில் பல கல்வி நிறுவனங்களை நிறுவி, அப்பகுதியில் உள்ள ஏழை மக்கள் கல்வி கற்க வழிவகை செய்தார்.

    “இளைஞர்கள் படிக்க வேண்டும். அப்போதுதான் சமுதாயமும், நாடும் முன்னேற்றம் அடையும். படிக்க எந்த ஊரில் பள்ளிக்கூடம் இல்லையோ, அந்த ஊரில் பள்ளிக்கூடம் கட்டிக் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன்” என்று கூறியதோடு மட்டுமல்லாமல், அதை செயல்படுத்தவும் செய்தார் திரு. சிவந்தி ஆதித்தன் அவர்கள். தமிழ்நாடு முழுவதும் ஏராளமான இடங்களில் புதிய பள்ளிக்கூடங்கள் அமைக்கவும், பள்ளிக் கூடங்கள், கல்லூரிகளுக்கு கட்டடங்கள் கட்டவும் தாராளமாக நிதி உதவி செய்தார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 15 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், சி.பா.ஆதித்தனார் நூற்றாண்டு மாளிகையை கட்டிக் கொடுத்தார்.

    எம்ஜிஆர்

    புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் டாக்டர். எம்.ஜி.ஆர். அவர்கள் ஏழை எளிய குழந்தைகளுக்காக சத்துணவு திட்டத்தை தொடங்கியபோது, முதலில் திருச்சி பாப்பாக்குறிச்சியில் தன் தந்தை அமரர் சி.பா.ஆதித்தனார் பெயரில் முதல் சத்துணவுக் கூடத்தை கட்டிக் கொடுத்தவர் டாக்டர். சிவந்தி ஆதித்தனார் அவர்கள்.

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் கல்வி வளர்ச்சியில் காட்டிய அதே அக்கறையை, விளையாட்டுத் துறை வளர்ச்சியிலும் காட்டினார்.

    தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவராக இருந்த அவர், 1987ஆம் ஆண்டு இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆசிய ஒலிம்பிக் சங்க துணைத் தலைவர் பதவி வகித்த அவர், ஆசிய ஒலிம்பிக் சங்கம், சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் பல விருதுகளைப் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் வாழ்நாள் தலைவராக 2000ஆவது ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் சிறந்த சேவை புரிந்ததற்காக 2008ஆம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கி கெளரவித்தது. இவருக்கு பல்வேறு பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்தன.

    இந்திய துணைக் கண்டத்தில், பத்திரிகை, விளையாட்டு, கல்வி, தொழில் முதலான பல்வேறு துறைகளிலும் பெரும் சாதனையாளராகத் திகழ்ந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் தொண்டினை வருங்கால சமுதாயத்தினரும் அறிந்து கொள்ளும் வகையிலும், அன்னாருக்கு வரலாற்றில் நீங்கா இடம் கிடைத்திடும் வகையிலும், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் பெருமைக்கும், புகழுக்கும் சிறப்பு சேர்க்கும் வகையில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், வீரபாண்டியன்பட்டணம் கிராமத்தில் அரசு சார்பாக மணிமண்டபம் அமைக்கப்படும் என்று, 22.11.2017 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் நான் அறிவித்தேன்.

    அதனை செயல்படுத்தும் விதமாக, ஒரு கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் செலவில் 60 சென்ட் நிலத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் மணிமண்டபம் அமைக்க 10.10.2018 அன்று நான் அடிக்கல் நாட்டினேன். இந்த மணிமண்டபத்தினை அமைக்கும் பணிகள் துரிதமாக முடிக்கப்பட்டு, இன்று நான் திறந்து வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

    வாக்குறுதிகளை கொடுப்பதோடு நிற்காமல், அதனை உடனடியாக நிறைவேற்றும் ஆட்சி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான் என்பதை மாண்புமிகு அம்மா அவர்கள் பலமுறை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். அவரிடம் பயிற்சி பெற்ற நாங்களும், “சொன்னதை செய்வோம், சொல்லாததையும் செய்வோம்” என்ற கொள்கையின் அடிப்படையில், செயல்பட்டு வருகிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மாண்புமிகு புரட்சித் தலைவர் அவர்களும், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களும், மாண்புமிகு அம்மாவின் அரசும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் எண்ணற்ற திட்டங்களை வழங்கி, தமிழ்நாட்டை ஒரு முன்னோடி மாநிலமாக்க தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவும், மக்களின் நல வாழ்வுக்காகவும் பல்வேறு திட்டங்களை மாண்புமிகு அம்மாவின் அரசு செயல்படுத்தி வருகிறது.

    அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் மாண்புமிகு அம்மாவின் அரசால் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் சிலவற்றை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.

    படித்த ஏழைப் பெண்களுக்கு 25,000 ரூபாயுடன் 8 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 4,399 பயனாளிகளுக்கு 11 கோடி ரூபாய் நிதி உதவியும், 12 கோடியே 31 லட்சம் ரூபாய் செலவில் 35.192 கிலோ கிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளன.

    படித்த ஏழை பெண்களுக்கு 50,000 ரூபாய் உதவியுடன் தலா 8 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 5,378 பயனாளிகளுக்கு 26 கோடியே 89 லட்சம் ரூபாய் நிதி உதவியும், 15 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 43.024 கிலோ கிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளன.

    குடிமராமத்து திட்டத்தின் கீழ் 39 பணிகள் 10 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன. 28 பணிகள் 11 கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.

    அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் 5,489 உழைக்கும் மகளிருக்கு 13 கோடியே 74 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

    விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ் 19 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 16 ஆயிரத்து 162 பயனாளிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.

    விலையில்லா வெள்ளாடுகள்/செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 13 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகள் 10 ஆயிரத்து 327 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

    விலையில்லா மிதிவண்டிகள் 14 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப் பீட்டில் 31 ஆயிரத்து 678 மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மாண்புமிகு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 38 ஆயிரத்து 419 பயனாளிகளுக்கு 22 கோடியே 64 லட்சம் ரூபாய் செலவில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளன.

    டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் 49 ஆயிரத்து 811 கர்ப்பிணிப் பெண்களுக்கு 47 கோடியே 67 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

    4 லட்சத்து 72 ஆயிரத்து 676 குடும்ப அட்டைதாரர்களுக்கு 1,000 ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு 47 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளன.

    மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் 23 ஆயிரத்து 5 குறு, சிறு விவசாயிகளுக்கு 188 கோடியே 40 லட்சம் ரூபாய் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

    ஆயிரத்து 559 பயனாளிகளுக்கு விலையில்லா கறவை பசுக்கள் 6 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளன.

    சட்டமன்ற விதி 110ன் கீழ் பெரியதாழையில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன்பிடி உடமைகளை கடலரிப்பில் இருந்து பாதுகாத்திடவும், கடலரிப்பினை குறைக்கவும் இரண்டு சிறிய நேர்கல் சுவர்களையும், கருங்கற்கள் மற்றும் கான்கிரீட்களால் ஆன அலை தடுப்புச் சுவரும் அமைக்கப்படும் என ஏற்கனவே நான் அறிவித்தேன். அதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது என்பதையும், விரைவில் இப்பணிகள் துவக்கப்பட உள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மீன்பிடி தடை கால நிவாரணமாக 19 ஆயிரத்து 232 மீன குடும்பங்களுக்கு 22 கோடியே 22 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

    மீன்பிடி குறைவு கால நிவாரணமாக 19 ஆயிரத்து 428 மீனவ குடும்பங்களுக்கு 27 கோடியே 85 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு கடல் மீனவ மகளிர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தின் கீழ் 22 ஆயிரத்து 482 மீனவ மகளிருக்கு 25 கோடியே 24 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளன.

    22 செயற்கைக்கோள் தொலைபேசிகள் 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளன.

    பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் 24 கோடியே 73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 1,374 பசுமை வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன.

    வங்கிக் கடன் இணைப்பு திட்டத்தின் கீழ் 14 ஆயிரத்து 184 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் உதவியாக 523 கோடியே 4 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

    நெடுஞ்சாலைகள் துறையின் மூலம் 220 கோடி ரூபாய் செலவில் 368.166 கி.மீ. நீளச் சாலைகள் மேம்பாடு செய்யப்பட்டுள்ளன.

    திருச்செந்தூர், சாத்தான்குளம், விளாத்திகுளம் ஆகிய தீயணைப்பு நிலையங்களுக்கு 3 கோடியே 11 லட்சம் ரூபாய் செலவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    பொதுப்பணித்துறை, நீர்வள ஆதார பிரிவின் கீழ் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே முக்காணியில்  25 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

    வைப்பார் ஆற்றின் குறுக்கே வேம்பாறு பகுதியில் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    நபார்டு வங்கி நிதி உதவியுடன் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வேம்பாறு ஆற்றில் வேம்பார் மற்றும் பெரியசாமிபுரம் கிராமங்களுக்கு அருகில் தடுப்பணைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    விளாத்திகுளம் இசை மாமேதை நல்லப்ப சுவாமிகள் அவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நினைவுத் தூண் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

    தூத்துக்குடி மாநகராட்சியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் 53 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பழைய பேருந்து நிலையம் 4 தளங்களுடன் மேம்படுத்தும் பணிகள் நடைபெறு வருகின்றன.

    தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாகன நிறுத்தம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சி பகுதியில் உள்ள பக்கிள் ஓடையின் இரு பக்கங்களிலும் சாலை வசதி செய்தல், பூங்காக்கள் அமைத்தல் போன்ற பணிகள் 78 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.

    கோவில்பட்டி நகராட்சி புதிய குடிநீர் அபிவிருத்தித் திட்டப் பணிகள் 81 கோடியே 82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முடிக்கப்பெற்று பயன்பாட்டில் உள்ளன.

    95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாநகராட்சி பகுதிகளுக்கு பாதாள சாக்கடை திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    8 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பராமரிப்பில் உள்ள 20 கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கு 108 மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இது தவிர இன்னும் எண்ணற்ற பணிகள் இந்த மாவட்டத்தில் மாண்புமிகு அம்மாவின் அரசால் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

    மேலும் இன்று நடைபெறும் இந்த விழாவில், தூத்துக்குடி மாநகராட்சி மூலம் நிறைவேற்றப்பட உள்ள 102 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணிகள் மற்றும் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் நிறைவேற்றப்பட உள்ள 72 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பணிகள் உட்பட 260 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான 47 திட்டங்களுக்கு நான் அடிக்கல் நாட்டியுள்ளேன்.

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் நிறைவேற்றப்பட்ட 23 கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பணிகள், மருத்துவத் துறையின் மூலம் நிறைவேற்றப்பட்ட 18 கோடியே 63 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணிகள் உட்பட 71 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான 15 பணிகளை நான் இன்று தொடங்கி வைத்துள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மாரடைப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் சிறப்பான உயர் சிகிச்சை மேற்கொண்டு, இருதய தசையை காப்பாற்றுவதோடு, நோயற்ற நிலைக்கே மீண்டும் திரும்ப, இருதய ரத்த நாள ஆய்வக மையங்கள் மூலம் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. 2016-17ஆம் ஆண்டு 9 அரசு மருத்துவமனைகளிலும், 2018-19ஆம் ஆண்டில் 6 அரசு மருத்துவமனைகளிலும் இந்த மையங்கள் நிறுவப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, 3.5 கோடி ரூபாய் செலவில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய ரத்த நாள ஆய்வகம் இன்று நான் திறந்து வைத்துள்ளேன்.

    பல்வேறு துறைகளின் சார்பில் 6,944 பயனாளிகளுக்கு 32 கோடியே 41 லட்சத்து 80 ஆயிரத்து 399 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நான் இன்று வழங்கினேன்.

    மாண்புமிகு புரட்சித் தலைவர் அவர்கள் நூற்றாண்டு விழாவில் இம்மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட 35 அறிவிப்புகளில் 15 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள 20 அறிவிப்புகளின் பணிகள் பல்வேறு நிலைகளில் நடைபெற்று வருகின்றன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மாண்புமிகு அம்மாவின் அரசு அனைத்துத் துறைகளிலும் தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகிறது. ஒவ்வொரு துறையும் போட்டி போட்டுக்கொண்டு விருதுகளை குவித்து வருகிறது. இந்தியாவிலேயே சிறந்த ஆளுமைமிக்க மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒரு சிலர் போல் நாங்கள் இல்லை. எங்களின் சுய லாபத்தை மட்டும் கருத்தில் கொண்டு, வாய்ச்சொல் வீரராக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளிக்காமல், சாத்தியமான திட்டங்களை மட்டும் அறிவித்து மாண்புமிகு அம்மாவின் அரசு செயல்படுத்தி வருகிறது.

    தாய் 8 அடி பாய்ந்தால், குட்டி 16 அடி பாயும் என்பார்கள். ஆனால் சிவந்தி ஆதித்தன் அவர்கள் 8 அடி பாய்ந்தால், அவர் மகன் திரு. பாலசுப்பிரமணியன் ஆதித்தன் அவர்கள் 16 அடி அல்ல, 32 அடி பாய்ந்துள்ளார்கள். தன் தாத்தா சி.பா. ஆதித்தனார், தந்தை சிவந்தி ஆதித்தன் உருவாக்கிய ‘தினத்தந்தி’யை மேலும் வளர்த்து இன்று துபாய், இலங்கை போன்ற வெளிநாடுகளிலும் தொடங்கப்பட்ட முதல் தமிழ் பதிப்பு என்ற பெருமையையும் ‘தினத்தந்தி’ குழுமத்துக்கு பெற்று தந்துள்ளார்.

    நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். திரு. பாலசுப்பிரமணியன் தாத்தா ‘தமிழர் தந்தை’ சி.பா. ஆதித்தனார் அவர்கள் சிறந்த பத்திரிகையாளர் என்று. அவர் தந்தை சிவந்தி ஆதித்தன் அவர்கள் சிறந்த நிர்வாகி என்று. ஆனால் திரு. பாலசுப்பிரமணிய ஆதித்தன் தன் தாத்தா, தகப்பனாரின் கலவையாக சிறந்த பத்திரிகையாளராகவும், சிறந்த நிர்வாகியாகவும் இருக்கிறார் என்பதற்கு அவரது நிர்வாகத்தில் இயங்கும் ‘தினத்தந்தி’, டி.டி. நெக்ஸ்ட் ஆங்கில பத்திரிகை, மாலை மலர், தந்தி டி.வி., ஹலோ எப்.எம்., மற்றும் சில வார, மாத இதழ்களே சாட்சி. இப்போது தன் மகன்களான சிவந்தி ஆதித்தன், ஆதவன் ஆதித்தன் ஆகியோருக்கும் பயிற்சி அளித்து வருகிறார். அந்த இளைஞர்களும் தன் பூட்டனார், தாத்தா, தந்தை போல பத்திரிகை துறையில் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்.

    இந்நிகழ்ச்சியினை நல்ல முறையில் ஏற்பாடு செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
    Next Story
    ×