search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிஏஏ-வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்களின் போராட்டம் 9-வது நாளாக நீட்டிப்பு.
    X
    சிஏஏ-வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்களின் போராட்டம் 9-வது நாளாக நீட்டிப்பு.

    தமிழ்நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டம் நீடிப்பு

    தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் நீடித்து வருகிறது.
    சென்னை:

    குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டத்தின் போது போலீசாருடன் மோதல் ஏற்பட்டது. இதில் தடியடி நடந்தது.

    இதையடுத்து, இந்த சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சென்னை வண்ணாரப்பேட்டையில் 9-வது நாளாக போராட்டம் நடைபெறுகிறது.

    இன்றும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடந்தன. அதன் விவரம் வருமாறு:-

    ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தில் எஸ்.டி. பி.ஐ. கட்சியின் சார்பாக பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பேரணியில் கலந்து கொண்டனர்.

    மதுரையில் மகபூப்பாளையத்தில் 9-வது நாளாக போராட்டம் நீடித்து வருகிறது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். நெல்பேட்டையில் 6-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. திடீர்நகர் ஜரிகைகார தெரு, பள்ளிவாசல் வளாகத்திலும் இன்று காலை முஸ்லிம்கள் உண்ணாவிரத போராட்டம் தொடங்கி உள்ளனர்.

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆற்றுமேடு பகுதியில் முஸ்லிம்கள் 4-வது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்ட திடலில் தொழுகை நடத்தியும், போராட்ட திடலிலே உணவு சாப்பிட்டு வருகின்றனர்.

    போராட்டத்தில் குழந்தைகள் பங்கேற்று உள்ளதாக கூறி போலீசார் குழந்தைகளை வெளியேற்ற முயற்சித்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    அனுமதியின்றி முஸ்லிம்கள் போரட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வாணியம்பாடி டவுன் போலீசார் 50 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    அதுபோல் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேல்மலையனூர் அருகே அவலூர் பேட்டையில் சுன்னத் ஜமாத்தினர் சார்பில் இந்தியக் குடியுரிமை சட்டத் திருத்தத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் கடைவீதியில் நடைபெற்றது.

    ஈரோட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.

    ஈரோடு மதரசா பள்ளிக்கூட சாலையில் நேற்று மாலை முஸ்லிம்கள் திரண்டு வந்தனர். இதில் பெண்களும் அதிக அளவில் வந்திருந்தனர். பின்னர் அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இன்று காலை மீண்டும் அதே பகுதியில் முஸ்லிம்கள் திரண்டு வந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி சேர்ந்த பிரமுகர்கள் சந்தித்து தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.

    சேலம் கோட்டை பால் தெருவில் முஸ்லிம் பெண்கள் கடந்த 17-ந்தேதி போராட்டத்தை தொடங்கினார்கள். இன்று 6-வது நாளாக போராட்டம் நீடித்து வருகிறது. இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றுள்ளனர். அவர்களை, பல்வேறு கட்சியினர் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றன.

    குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய கோரி கோவை உக்கடம் ஆத்துப்பாலத்தில் முஸ்லிம் அமைப்பினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று 4-வது நாளாக போராட்டம் நீடித்து வருகிறது.

    தாராபுரம் ஜின்னா மைதானத்தில் நேற்று மாலை முஸ்லிம் அமைப்பினர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்கள். இன்றும் உண்ணாவிரதம் தொடர்ந்து வருகிறது.

    குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் முஸ்லிம் இளைஞர்கள் கடந்த 17-ந்தேதி இரவு முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று 6-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. இதுவரை 100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    திருச்சி ஜமால் முகமது கல்லூரி அருகே குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மறியல் போராட்டம் நடத்திய மாணவர்கள் 81 பேர் மீதும், ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகே அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்டு கட்சி கிழக்கு பகுதி செயலாளர் அன்சருதீன் உள்பட 80 பேர் மீதும் என மொத் தம் 261 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    இதுபோல் புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் முஸ்லிம் அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேனி மாவட்டம், போடி நாயக்கனூரில் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மூவாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த ஆண்களும் பெண்களும் கட்டபொம்மன் சிலை முன்பாக இரவு நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இன்று நாகர்கோவில் கோட்டார் இளங்கடை பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தின் முன்பு முஸ்லிம்கள் திரண்டனர். அவர்கள் குடியுரிமை சட்ட திருத்தத்தை வாபஸ் பெறக்கோரி 24 மணிநேர போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் நாளை காலை 10 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் திரளானவர்கள் பங்கேற்றனர்.
    Next Story
    ×