search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணிமண்டபத்தை திறந்து வைத்த முதல்வர்
    X
    மணிமண்டபத்தை திறந்து வைத்த முதல்வர்

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் தமிழக முதல்வர்

    திருச்செந்தூர் அருகே வீரபாண்டியபட்டணத்தில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
    திருச்செந்தூர்:

    தமிழ் பத்திரிகை உலகில் முடிசூடா மன்னராக திகழ்ந்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு, திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

    இதற்காக, திருச்செந்தூர் அருகே வீரபாண்டியபட்டணத்தில் 60 சென்ட் நிலம் தேர்வு செய்யப்பட்ட நிலையில், 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 31-ந் தேதி மணிமண்டபம் கட்டுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அதே ஆண்டு அக்டோபர் மாதம் 26-ந் தேதி நடைபெற்ற கோலாகல விழாவில், மணிமண்டபம் கட்டுவதற்கு சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

    மணிமண்டபத்தை திறந்து வைக்க வந்த முதல்வருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்ட அரசு சார்பில் ரூ.1 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு, அவரது முழு உருவச்சிலையுடன் மணிமண்டபம் கட்டும் பணிகள் தொடங்கின. அதில், பூங்கா, நூலகத்துடன் பார்வையாளர்களுக்கான அனைத்து வசதிகளையும் செய்யும் பணிகள் நடைபெற்றன.

    மணிமண்டப கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு மணிமண்டபத்தை திறந்து வைத்து, சிவந்தி ஆதித்தனாருக்கு மரியாதை செலுத்தினார். 

    மணிமண்டபத்தில் சிவந்தி ஆதித்தனார் சிலையை திறந்து வைத்த முதல்வர்

    அதனைத் தொடர்ந்து, அங்குள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் அவர் உரையாற்றுகிறார்.

    மேலும், தூத்துக்குடி மாவட்ட புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுவதுடன், முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், சட்டசபை துணை சபாநாயகர், அரசு தலைமைக் கொறடா, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி, எம்.பி. - எம்.எல். ஏ.க்கள், வாரியத் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொள்கின்றனர்.
    Next Story
    ×