search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமாவளவன்
    X
    திருமாவளவன்

    குடியுரிமை சட்டம் வாபஸ் பெறும் வரை அறவழி போராட்டம் தொடரும்- திருமாவளவன்

    திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெறும் வரை அறவழி போராட்டம் தொடரும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
    திருச்சி:

    திருச்சியில் நாளை விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் தேசம் காப்போம் பேரணி, பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க, முன்னேற்பாடுகளை பார்வையிட திருச்சிக்கு விமானம் மூலம் இன்று காலை கட்சி தலைவர் திருமாவளவன் வந்தார். விமானநிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    திருச்சியில் நாளை (சனிக்கிழமை) விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் தேசம் காப்போம், பேரணி நடைபெறுகிறது. தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும், இந்திய குடியுரிமை பதிவேடு சட்டத்தை திரும்ப பெற வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி இந்த பேரணி திருச்சி எம்.ஜி.ஆர். சிலையிலிருந்து உழவர் சந்தை வரை நடைபெற உள்ளது. அதன்பிறகு உழவர் சந்தையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

    இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. பேரணியில் 5000 பேர் பங்கேற்க உள்ளனர். இதில் விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர்களை தவிர மற்ற கூட்டணி கட்சிகள் பங்கேற்கவில்லை. பேரணி குறித்து இன்று திருச்சி மாநகர போலீஸ் கமி‌ஷனர் மற்றும் அரசு அதிகாரிகளை சந்தித்து பேச உள்ளேன்.

    திமுக

    தி.மு.க. கட்சி சார்பில் 2 கோடி கையெழுத்து பெறப்பட்டு ஜனாதிபதியிடம் அளித்துள்ளோம். அப்போது எங்களிடம் ஜனாதிபதி உங்கள் எதிர்ப்புகள் அமைதியான வழியில் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அறவழியில் இருக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். எதிர்க்கட்சிகள் இந்த சட்டங்களை திரும்பப்பெற வேண்டுமென்று போராடி வருகின்றனர். ஆனால் பாரதப் பிரதமர் நரேந்திரமோடி எந்தக் காரணத்தைக் கொண்டும் இதில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்று கூறி உள்ளார். ஆனால் அந்த சட்டங்களை மத்திய அரசு வாபஸ் வாங்கும் வரை நாங்கள் விடமாட்டோம். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மாநில தொழிலாளர் விடுதலை முன்னணி செயலாளர் பிரபாகரன், மாவட்ட செயலாளர் வக்கீல் அருள், இளைஞர் எழுச்சி பாசறை செயலாளர் அரசு, மாநில செயலாளர் தமிழாதன், தொகுதி செயலாளர் வரதன் மாவட்ட துணை செயலாளர் லாரன்ஸ் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
    Next Story
    ×