search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்தரசன்
    X
    முத்தரசன்

    பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்கிற நிலை தமிழகத்தில் நிலவுகிறது- முத்தரசன்

    பணம் இருந்தால் எதையும் சாதித்துவிடலாம் என்ற சூழ்நிலை தமிழகத்தில் நிலவி வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
    திருச்சி:

    இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தக்கோரி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பாக திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் இன்று கையெழுத்து இயக்க நிகழ்ச்சி தொடங்கியது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன் முதல் கையெழுத்திட்டு இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: -

    நாட்டில் இன்றைக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது வேலையின்மை. கோடிக்கணக்கான இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு வேலை இல்லாததால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு வேலைக்காக காத்திருக்கும் சூழ்நிலை நிலவுகிறது.

    தமிழ்நாட்டில் மட்டும் ஏறத்தாழ ஒரு கோடி இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கின்றனர் என்று புள்ளி விவரம் கூறுகிறது. வேலை வாய்ப்புகளை உருவாக்க எந்த முயற்சியையும் மத்திய அரசும் மாநில அரசும் எடுக்கவில்லை. 2014 ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நரேந்திர மோடி, ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாங்கி தருவதாக வாக்குறுதி அளித்தார். அதற்கான திட்டங்களை நாங்கள் செயல்படுத்துவோம் என்று கூறினார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    பிரதமர் மோடி


    மீண்டும் 2-வது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அப்படி அவர் கூறியபடி இந்த ஆண்டில் 10 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யாமல் 10ஆயிரம் பேருக்கு கூட வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. மத்திய அரசு பணிகளிலும் மாநில அரசு பணிகளிலும் காலிப்பணியிடங்கள் ஏராளமாக இருக்கிறது. ஏற்கனவே பணியில் இருப்பவர்கள் நிரப்பப்படாத பணியிடங்களுக்கான வேலைகளையும் அவர்களே செய்து முடிப்பதால் அதிக மன உளைச்சலில் காணப்படுகின்றனர். டி.என்.பி.எஸ்.சி. மீது தமிழக மக்கள் மிகப்பெரிய அளவில் நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால் அந்த அமைப்பானது இன்றைக்கு சீரழிந்து போயிருக்கிறது. அதில் நடைபெறுகிற முறைகேடுகள் தொடர்ந்து வெளிச்சத்துக்கு வந்து கொண்டே இருக்கிறது. பலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இதற்கு மூலகாரணமாக இருந்த அதிகாரிகள் கண்டறிய படாமல் இருக்கிறது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று தொடர்ந்து எங்கள் கட்சியின் சார்பாக வலியுறுத்தி வருகிறோம்.

    பணம் இருந்தால் எதையும் சாதித்துவிடலாம் என்ற சூழ்நிலை தமிழகத்தில் நிலவி வருகிறது. வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பாக தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெறப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாவட்ட செயலாளர் செல்வகுமார், முருகேசன், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பேச்சாளர் இமாம் ஹஸ்ஸான், நிர்வாகிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.
    Next Story
    ×