search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிடிவி தினகரன்
    X
    டிடிவி தினகரன்

    ‘நீட்’ தேர்வு தீர்மானம் போல் இதுவும் பயன் தராது- தினகரன் குற்றச்சாட்டு

    பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம் என்பது நீட் தேர்வு தீர்மானம் போல் பயன் தராது என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பல்வேறு தரப்பினரும் சந்தேகப்பட்டதைப் போலவே தெளிவில்லாத ‘தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மேம்படுத்துதல் சட்டத்தை’ அரசு கொண்டுவந்து விவசாயிகளையும் தமிழக மக்களையும் மீண்டும் ஒருமுறை நம்ப வைத்து ஏமாற்றி இருக்கிறதோ? என்று கருதத் தோன்றுகிறது.

    ‘காவிரி பாசனப்பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கப்படும்’ என்று முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவித்தபோது, ‘இவர்கள் உண்மையான அக்கறையோடு இதனைச் செயல்படுத்துவார்களா?’ என்ற சந்தேகம் பல்வேறு தரப்பினரிடமும் ஏற்பட்டது. மீத்தேன், ஹைட்ரோகார்பன், விவசாய நிலங்களில் கெயில் எரிவாயுக் குழாய் பதித்தல் உள்ளிட்ட விவசாயத்தைப் பாதிக்கும் திட்டங்கள் அனைத்தையும் கடந்த 3 ஆண்டுகளில் அவற்றையெல்லாம் சிவப்புக் கம்பளம் விரித்து இங்கே செயல்படுத்தியது பழனிசாமி அரசு.

    வார்த்தைக்கு வார்த்தை ‘நானும் ஒரு விவசாயி’ என்று சொல்லிக்கொண்டே, இத்திட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகளையும், செயல்பாட்டாளர்களையும் சமூக விரோதிகளைப் போலவும், பயங்கரவாதிகளைப் போன்றும் விரட்டி, விரட்டி வழக்குகளைப் போட்டு கைது செய்ததும் இதே பழனிசாமி தான். இப்போது தேர்தல் நெருங்குகிறது என்பதால் இந்த நாடகத்தை அரங்கேற்றுகிறார்களோ என்ற ஐயம் எழுந்திருக்கிறது.

    ‘நீட் தேர்வு வேண்டாம்’ என்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதா திருப்பி அனுப்பப்பட்ட செய்தியை பல மாதங்களுக்குப் பிறகு மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவிக்கும் வரை மூடி மறைத்து தமிழக மாணவர்களையும், பெற்றோர்களையும் வஞ்சித்த வரலாறு இவர்களுக்கு இருக்கிறது. இப்போது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கான மசோதா, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பிறகு இந்த சந்தேகங்கள் எல்லாம் உறுதியாகி, வழக்கம் போலவே இவர்கள் தமிழக மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள் என்பது அம்பலமாகியிருக்கிறது.

    வேளாண் மண்டலத்திற்கான அறிவிப்பை சேலத்தில் வெளியிட்டபோது பழனிசாமி குறிப்பிட்டிருந்த அரியலூர், திருச்சி, கரூர் மாவட்ட பகுதிகள் பாதுகாக்கப்பட்ட மண்டலத்திற்குள் சட்ட மதோசாவின் முதலாம் இணைப்புப் பட்டியலில் கொண்டுவரப்படவில்லை.

    காவிரி பாசன மாவட்டங்களில் தற்போது ஓ.என்.ஜி.சி செயல்படுத்தி வரும் 152 எண்ணெய்க் கிணறுகள் அப்படியே தொடரவிருக்கின்றனவா?. மேலும் கடந்த ஆண்டு காவிரிப்படுகை பகுதிகளை இரண்டு மண்டலங்களாக பிரித்து 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு வேதாந்தா, ஓ.என்.ஜி.சி, ஐ.ஓ.சி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு கொடுத்த அனுமதி தொடருமா, இல்லையா என்ற தெளிவும் இந்தச்சட்டத்தில் இல்லை.

    சரியான சந்தேகங்களுக்கு திருத்தங்களுடன் புதிய மசோதாவை கொண்டு வராவிட்டால் தங்களுக்கு இழைத்த துரோகமாகவே ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளும் இதனைக் கருதுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×