search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு அரசு
    X
    தமிழ்நாடு அரசு

    4 மாவட்டங்களில் ஏழை மாணவர்களுக்கு இலவச பயிற்சி மையம்- உயர்கல்வித்துறை ஏற்பாடு

    ஏழை-எளிய மாணவர்கள் அரசு துறை பணிகளில் சேருவதற்கான போட்டித் தேர்வை எளிதாக சந்திக்க 4 மாவட்டங்களில் இலவச பயிற்சி மையங்கள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக அரசு அண்ணா கல்வி நிறுவனம் சார்பில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான இலவச பயிற்சியை மையங்கள் மூலம் நடத்தி வருகிறது. ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் சென்னையில் ராணிமேரி கல்லூரியிலும், மதுரையில் மீனாட்சி அரசு கலைக்கல்லூரியிலும் நடந்து வருகிறது.

    இந்த 2 கல்லூரி மையங்களிலும் முறையான அலுவலர்கள் இல்லை. மேலும் இந்த தேர்வு மையங்கள் முழுவதும் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான பயிற்சி மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

    அவை தவிர ஏனைய போட்டி தேர்வுகளை ஏழை மாணவர்கள் எதிர் கொள்கிற இலவச பயிற்சி மையம் இல்லாததால் ஏழை மாணவர்கள் இத்தேர்வுகளில் பங்கேற்க முடியாத நிலை இருந்து வருகிறது.

    ஏழை-எளிய மாணவர்கள் அரசு துறை பணிகளில் சேருவதற்கான போட்டித் தேர்வை எளிதாக சந்திக்க 4 மாவட்டங்களில் இலவச பயிற்சி மையங்கள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை, கோவை, மதுரை, சேலம் ஆகிய நகரங்களில் அந்தந்த பல்கலைக்கழகங்கள் வழியாக இதனை செயல்படுத்த உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

    சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம், கோவையில் பாரதியார் பல்கலைக்கழகம், மதுரையில் காமராஜர் பல்கலைக்கழகம், சேலத்தில் பெரியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் மூலம் பயிற்சி மையங்கள் அமைக்கப்படுகின்றன.

    பயிற்சி மையங்களில் அரசு கல்லூரிகளில் பணியாற்றும் உதவி பேராசிரியர்கள் பயிற்சியினை வழங்க இருக்கின்றனர். பயிற்சி மையங்களில் பணியாற்ற விருப்பம் உள்ள உதவி பேராசிரியர்களிடம் இருந்து விருப்ப கடிதம் கேட்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக கல்லூரி கல்வி இயக்குனர் ஜோதி வெங்கடேஸ்வரன் அனைத்து அரசு கலைக்கல்லூரி முதல்வர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். இதற்கான சம்பளம் அண்ணா இன்ஸ்டியூட் நிர்வாகம் வழங்க திட்டமிட்டுள்ளது.

    இது குறித்து இயக்குனர் ஜோதி வெங்கடேஸ்வரன் கூறுகையில், ஏழை மாணவர்களுக்கு போட்டித் தேர்வு பயிற்சி அளிக்க 4 இடங்களில் மையம் தொடங்கப்படுகிறது. இந்த மையத்தில் பணியாற்ற உதவி பேராசிரியர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அனைத்து அரசு கல்லூரிகளிலும் இருந்தும் விருப்பம் உள்ளவர்கள் வரலாம் என்றார்.

    கோவை, சேலம், மதுரை பகுதியில் உள்ள கிராமப்புற மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்ற அடிப்படையில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது.
    Next Story
    ×