search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்துக்குள்ளான ஆம்னி பஸ்களை படத்தில் காணலாம்.
    X
    விபத்துக்குள்ளான ஆம்னி பஸ்களை படத்தில் காணலாம்.

    சேலம் அருகே ஆம்னி பஸ்கள் மோதி விபத்து- நேபாள சுற்றுலா பயணிகள்6 பேர் உயிரிழப்பு

    சேலம் மாவட்டம் நரிப்பள்ளம் என்ற இடத்தில் இரண்டு ஆம்னி பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் நேபாள சுற்றுலாப் பயணிகள் 6 பேர் உயிரிழந்தனர்.
    சேலம்:

    நேபாள நாடு காட்மண்ட் பகுதியைச் சேர்ந்தவர்கள் பீர்பகதூர்ராஷ் (வயது 26), பீக்காரம் (31), புல்கரிசாவுத்ரி (34), கோபால் தாமஸ்.

    இவர்கள் உள்பட அந்த நாட்டை சேர்ந்த 33 பேர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தனர். பின்னர் ஆம்னி பஸ் ஒன்றில் கன்னியாகுமரிக்கு புறப்பட்ட அவர்கள் நேற்று கன்னியாகுமரியில் விவேகானந்தா பாறை, காந்தி நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை, பகவதி அம்மன் கோவில் உள்பட பல பகுதிகளை பார்வையிட்டனர்.



    பின்னர் அங்கிருந்து ராஜஸ்தான் மாநிலத்திற்கு ஆம்னி பஸ்சில் புறப்பட்டனர். அந்த பஸ் நள்ளிரவு 1 மணி அளவில் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓமலூர் நரிப்பள்ளம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் அருகில் உள்ள ஒரு மாரியம்மன் கோவில் மண்டபத்தில் தங்கிவிட்டு அங்கிருந்து காலையில் புறப்பட்டு செல்லலாம் என்று முடிவு செய்தனர்.

    இதையடுத்து நரிப்பள்ளம் பிரிவில் தேசிய நெடுஞ்சாலையில் பஸ்சை டிரைவர் எதிர்புற சாலையில் செல்ல யூடர்ன் எடுத்து திருப்பினார். அப்போது பெங்களூருவில் இருந்து கேரள மாநிலத்திற்கு செல்வதற்காக அதிவேகமாக வந்த மற்றொரு ஆம்னி பஸ் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சென்ற பஸ்சின் நடுப்பகுதியில் பயங்கரமாக மோதியது.

    இதில் சுற்றுலா பயணிகள் சென்ற பஸ் கவிழ்ந்தது. இதனால் பஸ்சுக்குள் இருந்த பயணிகள் அலறினர். ரத்த வெள்ளத்தில் கதறி துடித்தனர். இதைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கும், ஆம்புலன்ஸ் குழுவினருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர் மற்றும் போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டனர்.

    இதில் சம்பவ இடத்திலேயே நேபாள நாட்டை சேர்ந்த பீர்பகதூர்ராஷ் (வயது 26), பீக்காரம் (31), புல்கரிசாவுத்ரி (34), கோபால் தாமஸ் ஆகிய 4 பேர் ரத்த வெள்ளத்தில் இறந்தனர். மற்றவர்களை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காட்சி.


    இதில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த போதினி என்ற பெண் மற்றும் விஷ்ணு தாக்கல் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இனால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.

    மேலும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லேசான காயம் அடைந்த 20 பேர் சாதாரண வார்டுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    நள்ளிரவில் நடந்த இந்த விபத்து காரணமாக சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனை போக்குவரத்து போலீசார் சரி செய்தனர். அதன்பிறகு போக்குவரத்து சீரானது.

    Next Story
    ×