search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பன்றி காய்ச்சல்
    X
    பன்றி காய்ச்சல்

    தும்முபவர்களிடம் இருந்து 1 மீட்டர் விலகி இருக்க வேண்டும்- பன்றிக்காய்ச்சலை தடுக்க அதிகாரிகள் அறிவுரை

    தும்முபவர்களிடம் இருந்து 1 மீட்டர் விலகி இருக்க வேண்டும், ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறை கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் என பன்றிக்காய்ச்சலை தடுக்க அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
    சென்னை:

    இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே பன்றிக்காய்ச்சல் மீண்டும் பரவத் தொடங்கி உள்ளது. பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவர அறிக்கையில் இந்தியா முழுவதும் ஜனவரி 1-ந்தேதி முதல் பிப்ரவரி 2-ந்தேதி வரை பன்றிக்காய்ச்சலால் 437 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் ஒரு மாதத்தில் 132 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் உயிர் இழந்துள்ளார்.

    தெலுங்கானாவில் 78 பேரும், கர்நாடகாவில் 74 பேரும், டெல்லியில் 43 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு தமிழகத்தில் 1038 பேர் உள்பட நாடு முழுவதும் 28,798 பேர் பாதிக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

    சென்னையிலும் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவுகிறது. பன்றிக்காய்ச்சலை தடுப்பது எப்படி என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    பன்றிக்காய்ச்சல் தொற்று நோய் என்பதால் அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும் போதும், தும்மும் போதும் வெளியே வரும் எச்சில் மற்றும் சளி மூலம் வைரஸ் கிருமிகள் காற்றில் பரவுகிறது. இந்த கிருமிகள் படிந்துள்ள கதவு, கைப்பிடி, நாற்காலி, மேஜை, குளிர்சாதன பெட்டி போன்ற பல்வேறு பொருட்களை தொடும் போது கைகளில் கிருமி ஒட்டிக்கொள்கிறது.

    அதன்பிறகு கைகளை கழுவாமல் கண்கள், மூக்கு மற்றும் வாயை தொடும் போது நமக்கும் கிருமி தொற்று ஏற்படுகிறது. இதை தடுக்க கைகள் மற்றும் கால்களை சோப்பு போட்டு நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறை கைகளை சுத்தமாக கழுவுவது மிகவும் நல்லது.

    கைகளை கழுவாமல் மூக்கு, வாய் மற்றும் கண்களை தொடக்கூடாது. காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் மற்றும் இருமல், தும்மல் இருப்பவர்களிடம் இருந்து சுமார் 1 மீட்டர் இடைவெளி விட்டு விலகி இருக்க வேண்டும். சளி, காய்ச்சல், இருமல், தும்மல், தலைவலி, தொண்டை வலி போன்றவை பன்றிக்காய்ச்சலின் அறிகுறிகளாகும். சிலருக்கு இந்த அறிகுறிகளுடன் வாந்தி அல்லது வயிற்று போக்கு ஏற்படலாம்.

    எனவே காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். முறையாக சிகிச்சை பெற்றால் 1 வாரத்தில் காய்ச்சல் குணம் அடைந்துவிடும். கடையில் தானாக மாத்திரைகளை வாங்கி சாப்பிடக்கூடாது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×