search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ் தாத்தா உவே சாமிநாதன்
    X
    தமிழ் தாத்தா உவே சாமிநாதன்

    தமிழைக் காத்த தமிழ் தாத்தா

    பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்தலே தம் வாழ்வின் குறிக்கோளாக கொண்டிருந்த உ.வே.சா., பாரதியாரால் “கும்பமுனி எனத்தோன்றும் சாமிநாதப் புலவன்” என்று பாராட்டப்பட்டார்.
    இன்று (பிப்ரவரி 19-ந் தேதி) தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதன் பிறந்த நாள்.

    தமிழின் சிறப்பை உலகறியச் செய்து தொன்மையான தமிழ் இலக்கியங்கள் பலவற்றை மீட்டுக் கொடுத்தவர் உ.வே.சா. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏட்டுச்சுவடிகளைச் சேகரித்தார். 90-க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சில் கொண்டு வந்தார். பிற்காலத்தில் தமிழின் தூதுவராக இருந்து சங்க இலக்கியங்களை ஓலைச்சுவடிகளில் இருந்து பதிப்பித்து ‘தமிழ் தாத்தா’ என்று பட்டப்பெயர் பெற்றார்.

    உ.வே.சா. 19.2.1855-ல் வேங்கடசுப்பு-சரஸ்வதி தம்பதியருக்கு மகனாக பிறந்தார். அவருக்கு பதினான்காம் வயதில் திருமணம் நடந்தது. பெற்றோர் வேங்கட ரமணன் என்று பெயர் வைத்தனர். திருவாவடுதுறை ஆதீன வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையே அவருக்கு சாமிநாதன் என்ற பெயர் சூட்டி தமிழ் கற்பித்தார். ஓலைச்சுவடிகளில் இருந்த சங்க இலக்கியங்களையும், சிலம்பு உள்ளிட்ட காவியங்களையும் பல்வேறு சிற்றிலக்கியங்களையும், புராணங்களையும் பதிப்பித்து புகழின் உச்சிக்குச் சென்ற அவருக்கு முன்பும் சரி, பின்பும் சரி அவரளவுக்கு ஓலைச்சுவடிகளை சேகரித்து ஒருவரும் பதிப்பிக்கவில்லை.

    தன் வித்யாகுரு மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் கல்வி பயின்ற காலம் தொடங்கி 87-ம் வயதில் இறக்கும் வரை அவரை உ.வே.சா. மறக்கவில்லை. தம்முடைய சுயசரிதையைக் காட்டிலும் குருவின் வாழ்க்கை வரலாற்றையே முதலில் எழுதினார். நூலில் குருவின் பெயரை எழுத அஞ்சி, பிள்ளை என்றே குறிப்பிட்டுள்ளார். பலரின் வற்புறுத்தலால் தம் 80-வது வயதுக்கு மேல் “என் சரித்திரம்” என்ற பெயரில் தன் வாழ்க்கையை எழுதினார்.

    தியாகராச செட்டியாரின் பரிந்துரையில் கும்பகோணம் கல்லூரியில் வேலை கிடைத்த போதும் அதை மறுத்து தன் விசுவாசத்தையும், நன்றியையும் வெளிப்படுத்தினார். பின்பு தியாகராச செட்டியாரின் வற்புறுத்தலால் ஆதீனம் சுப்பிரமணிய தேசிகர், உ.வே.சா.வை வழியனுப்பி வைத்தார். தியாகராச செட்டியாரை மறக்காமல் தன் வீட்டிற்குத் ‘தியாகராசர் விலாசம்’ என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். உ.வே.சா. அந்த காலத்தில் சுவடி படிக்கத் தெரிந்தவர் சுவடியை நகல் செய்து புத்தகமாகப் போடும்போது சுவடியில் இருப்பது போன்றே அச்சிட்டனர். ஆனால் உ.வே.சா முன்னுரை, ஆய்வுரை, மேற்கோள் நூல்களின் பட்டியல், எடுத்தாண்ட சுவடிகளின் பட்டியல், நூலாசிரியர் மற்றும் உரையாசிரியர் வரலாறு போன்ற தகவல்களையும் பதிப்பித்து புது புரட்சி ஏற்படுத்தினார். தமிழ் செம்மொழி தகுதி பெற உ.வே.சா. போன்றோரும் காரணமாவர்.

    ஓலைச்சுவடி

    எவ்வளவுதான் கவனம் எடுத்து வாசித்து ஓலைச்சுவடியை அச்சு நூலாக பதிப்பித்தாலும் ஓரிரண்டு பிழைகள் வரவே செய்யும். சிலப்பதிகார முதல் பதிப்பில் கானல்வரியில் ‘சேரல் மட வன்னம் சேரல் நடை ஒவ்வாய்’ என்ற வரி ‘சொல் மடவன்னம் சொல் நடை ஒவ்வாய்’ என்றே உள்ளது. மறுபதிப்பில் இதனைத் திருத்தி வெளியிட்டார். சிறந்த பதிப்பாசிரியராக மட்டுமின்றி உரையாசிரியராக, பேச்சாளராக இவர் விளங்கினார். தமக்கு தெரியாத துறையில் உ.வே.சா. ஈடுபட்டதில்லை. சான்றாக அன்பில் நகரில் கிடைத்த செப்பேட்டை படித்து வெளியிட ஒருவர் அவருக்கு கொடுக்க, அந்த பணியை அவர் ஏற்றுக்கொள்ளாமல் கல்வெட்டுத்துறைக்கு அனுப்பிவைத்தார்.

    உ.வே.சா. தாரமங்கலத்தில் சுவடி கிடைக்காத நிலையில் அங்கிருந்த கோவிலுக்குச் சென்றார். வழியில் முள் காலைத் தைத்தது. இதுபற்றி அவர் கூறும்போது, ‘முள் காலைத் தைத்தது சிற்பம் என் உள்ளத்தை தைத்தது’ என்று உணர்ச்சிகரமாக குறிப்பிட்டுள்ளார். சுவடி சேகரிக்கச் சென்றபோது நேரிட்ட அவமானங்களைத் தமிழுக்காக தாங்கிக் கொண்டார். மாட்டுவண்டியில் சென்றும், நடந்து சென்றும் பல சுவடிகளைச் சேகரித்துள்ளார்.

    ஓலைச்சுவடிகளைப் புதிதாக ஏடுகளில் நகல் செய்துகொண்டு பழையவற்றை நீரில் விடுவர் அல்லது தீயில் எரிக்கச் செய்வர். அவர் காலத்தில் அச்சு நூல்கள் வழக்கிற்கு வந்துவிட்டதால் சுவடி படிப்பவர் குறைய, ஆடிப்பெருக்கு போன்ற நாட்களில் ஓலையை நகல் செய்யாமலேயே நீரில் அல்லது தீயில் இட முற்பட்டனர். இது சாஸ்திரம் என்றும் சிலர் தவறாக கூற உ.வே.சா. மிகுந்த சினம் கொண்டு தீயில் இடுவதாக சொன்ன சாஸ்திரத்தையே முதலில் தீயில் இட வேண்டும் என்றார்.

    பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்தலே தம் வாழ்வின் குறிக்கோளாக கொண்டிருந்த உ.வே.சா. தம்மை ஆதரித்த திருவாவடுதுறை ஆதீனத்தைக் கோவிலாகவே கருதினார். அவருடைய இறப்பு நிகழ்ந்த இடமும் திருக்கழுக்குன்றத்தில் உள்ள திருவாவடுதுறை ஆதீனக் கிளை மடமேயாகும்.

    இவர் பலருக்கும், பல நிறுவனங்களுக்கும் தமிழ் தொடர்பாக கடிதங்களை எழுதியுள்ளார். மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்கள் பலரிடமிருந்து இவருக்கு வந்துள்ளன. உடனுக்குடன் பதில் எழுதி அனுப்பிவிட்டு வந்த கடிதங்களையும் அவர் பாதுகாத்து வைத்துள்ளார். சமீபத்தில் ‘உ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம்’ முதல் தொகுதி வெளி வந்துள்ளது.

    தமிழ்த்தொண்டில் மதம் குறுக்கிடுவதை அவர் விரும்பவில்லை. சமண தாத்பரியங்களைத் தெரிந்துகொண்டு சீவக சிந்தாமணியையும், பவுத்த மதத் தத்துவங்களை அறிந்துகொண்டு மணிமேகலையையும் பதிப்பித்துள்ளார்.

    பத்துப்பாட்டு ஓலைச்சுவடிகள் முழுமையாக கிடைக்காத நிலையில் நெல்லை மாவட்டம் களக்காட்டில் உள்ள தெற்கு சைவ மடத்தில் பத்துப்பாட்டு மூலம் முழுவதும் அடங்கிய சுவடி கிடைத்தது. ‘ஆனந்த வெள்ளத்தில் மூழ்கினேன் முன்பே கிடைத்திருந்தால் எவ்வளவு அனுகூலமாக இருந்திருக்கும்’ என மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இவர் ஸ்ரீவைகுண்டத்தில் கிடைத்த முல்லைப்பாட்டு சுவடியையொட்டி ‘இரவில் மலர்ந்த முல்லை’ என்ற அரிய கட்டுரை எழுதியுள்ளார். மிதிலைப்பட்டி கவிராயர் வீட்டில் ஓர் ஏட்டின் மேல் ‘புறநானூறு உரை சிலப்பதிகார உரை’ என்ற குறிப்பு இருந்ததை கண்ட உ.வே.சா. ‘குருடனுக்கு கண் கிடைத்தது போல ஆனந்தம் உண்டாயிற்று’ என்று எழுதுகிறார். என்னே! உ.வே.சா.வின் தமிழ்ப்பற்று.

    பாரதியாரால் “கும்பமுனி எனத்தோன்றும் சாமிநாதப் புலவன்” என்று பாராட்டப்பட்டார். உ.வே.சாவை ரவீந்திரநாத் தாகூரும், காந்தியடிகளும் சென்னையில் சந்தித்து பேசினார்கள் என்றால் எத்தகு புகழுடன் வாழ்ந்து வந்தார் என்பதை நாம் யூகிக்கலாம். அவரைத் தேடி பல விருதுகள் வந்தடைந்தன. ஆண்டுதோறும் அரசு விழா எடுக்க, தமிழன்பர்களும் கருத்தரங்குகள் நடத்தி மகிழ்கின்றனர். உ.வே.சா. வழி நின்று நாம் தமிழை வளர்ப்போமாக.


    ச.கிருஷ்ணமூர்த்தி,
    முன்னாள் தொல்லியல் அதிகாரி
    (தமிழக அரசின் உ.வே.சா. விருது பெற்றவர்)
    Next Story
    ×