search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீசார் விசாரணை
    X
    போலீசார் விசாரணை

    என்ஜினீயரிங் மாணவர் கொலை: வடமாநில வாலிபர்கள் 10 பேரிடம் போலீசார் விசாரணை

    சூலூர் அருகே செல்போன் பறிக்கும் தகராறில் என்ஜினீயரிங் மாணவர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின்பேரில் வடமாநில வாலிபர்கள் 10 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை சூலூர் அருகே உள்ள நடு அரசூர் சடையன் தோட்டத்தை சேர்ந்தவர் தனுஷ்கோடி. கட்டிட மேஸ்திரி. இவரது மகன் தமிழ் செல்வன் (வயது 20). இவர் காளப்பட்டியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    தமிழ் செல்வன் நேற்று முன்தினம் இரவு கல்லூரிக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து சென்றார். வீட்டின் அருகே சென்ற போது அந்த வழியாக மொபட் , மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் தமிழ்செல்வனிடம் இருந்து செல்போனை பறிக்க முயன்றனர்.

    அப்போது நடந்த மோதலில் தமிழ்செல்வனை 3 வாலிபர்களும் சேர்ந்து குத்தி கொன்றனர். இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய தமிழ் செல்வன் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.

    மற்றொரு சம்பவத்தில் தென்னம்பாளையம்- அன்னூர் ரோட்டில் மொபட்டில் சென்ற அரசூரை சேர்ந்த சுந்தர மகாலிங்கம் (25) என்பவரை மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கும்பல் முகவரி கேட்பது போல நடித்து அவரை கத்தியால் குத்தி விட்டு செல்போன் மற்றும் மொபட்டை பறித்து தப்பிச் சென்றனர்.

    பின்னர் மொபட்டை 1 கிலோமீட்டர் தூரம் தாண்டி போட்டு விட்டு சென்றனர். இதில் படுகாயம் அடைந்த சுந்தர மகாலிங்கம் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவங்கள் குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மாவட்ட சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவின் பேரில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடி வருகிறார்கள். சூலூர் பகுதியில் ஏராளமான வட மாநில வாலிபர்கள் தங்கி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 10 வடமாநில வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சுந்தர மகாலிங்கத்திடம் குற்றவாளிகள் பறித்து சென்ற செல்போன் எண்ணை வைத்தும் குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×