search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை நடந்த நகை அடகுக்கடை முன்பு திரண்ட பொதுமக்கள்.
    X
    கொள்ளை நடந்த நகை அடகுக்கடை முன்பு திரண்ட பொதுமக்கள்.

    விழுப்புரம் அருகே பெண்ணை கட்டிப்போட்டு நகை அடகு கடையில் கொள்ளை

    விழுப்புரம் அருகே நகை அடகு கடையில் பெண்ணை கட்டிப்போட்டு மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செஞ்சி:

    விழுப்புரம் அருகே உள்ள துத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 49). இவர் வீட்டின் முன் பகுதியில் நகை அடகு கடை நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு 10 மணியளவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குள் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தூங்கினார். வராண்டாவில் நாகராஜனின் மாமியார் நாகம்மாள்(55) என்பவர் தூங்கிக்கொண்டிருந்தார்.

    நள்ளிரவு 1 மணியளவில் அங்கு 5 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் நகை அடகுக்கடையின் இரும்பு கேட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்பு அங்கு தூங்கிகொண்டிருந்த நாகம்மாள் சத்தம் போடாமல் இருக்க வாயில் துணியை திணித்தனர்.

    பின்னர் அவரை அலாக்காக தூக்கிக்கொண்டு வீட்டின் பின்புறத்தில் உள்ள தென்னை மரத்தில் கயிற்றால் கட்டினர்.

    பின்னர் அவர்கள் நகை அடகு கடைக்குள் புகுந்தனர். அங்கிருந்த பீரோவை உடைத்தனர். அதில் ரூ.1 லட்ச ரொக்க பணம், ½ கிலோ வெள்ளி நகைகள் மற்றும் தங்க நகைகள் இருந்தன. அவற்றை ஒரு பையில் அள்ளிப்போட்டுக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

    இன்று காலையில் நாகராஜ் எழுந்தார். அப்போது வராண்டாவில் படுத்து தூங்கிய மாமியார் நாகம்மாளை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் நகை அடகு கடைக்கு சென்று பார்த்தார். அங்கு பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக் கிடந்தன. அதில் இருந்த நகை- பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

    வீட்டின் பின்புறம் சென்று பார்த்தபோது அங்கு தென்னமரத்தில் மாமியார் நாகம்மாள் கைகள் கட்டப்பட்டு வாயில் துணி திணிக்கப்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டார். உடனடியாக அவர் வாயில் இருந்த துணியை அகற்றினார்.

    இந்த கொள்ளை குறித்து அனந்தபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. உடனடியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு நீதிராஜ், இன்ஸ்பெக்டர் ஜீவராஜ்மணிகண்டன், சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமிநாராயணன் மற்றும் போலீசார் கொள்ளைபோன நகை அடகு கடையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    மேலும் இந்த கொள்ளையில் துப்பு துலக்க விழுப்புரத்தில் இருந்து போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது நகை அடகுக்கடைக்குள் புகுந்து மோப்பம் பிடித்து விட்டு வெளியே ஓடி நின்றது.

    கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர். நகை அடகுக் கடையில் கொள்ளையடித்து சென்ற மர்மமனிதர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×