
வேட்டவலம்:
வேட்டவலத்தை அடுத்த செல்லங்குப்பம் கிராமம் புது காலனியில் வசிக்கும் கோவிந்தன் மனைவி மகாலட்சுமி (வயது 32). இவருடைய குழந்தைக்கு காது குத்தும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.
விழாவில் பிரியாணி விருந்து வைக்கப்பட்டது. அப்போது அதே ஊரைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் தனக்கு பிரியாணி பார்சல் வேண்டும் என மகாலட்சுமியின் உறவினர் சுகுமாரிடம் தகராறு செய்துள்ளார்.
அவரை அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் தனது விழாவில் தகராறு செய்த ஏழுமலையிடம் நியாயம் கேட்க மகாலட்சுமியின் உறவினர் பாஸ்கர் மற்றும் பலர் சென்றனர்.
அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அதே பகுதியை சேர்ந்த ராஜீ மகன் பாஸ்கர் என்பவர் அவர்களை சமாதானம் செய்துள்ளார். அப்போது ஏழுமலை, பாஸ்கரிடம் நீ யார் சமாதானம் பேச எனக் கூறியுள்ளார்.
இதில் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டு பாஸ்கரை ஏழுமலை கீழே தள்ளி அடித்து உதைத்து மாடு வெட்டும் கத்தியால் வயிறு மற்றும் நெற்றியில் குத்தி உள்ளார். இதில் படுகாயமடைந்த பாஸ்கரை அவரது உறவினர்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து வேட்டவலம் போலீசில் மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்தார்.