search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    நெடுஞ்சாலைத் துறையில் சாலை பாதுகாப்புக்கு தனி பிரிவு

    சாலை வடிவமைப்பில் சாலைப் பாதுகாப்பு அம்சங்களும் உள்ளடங்கி இருப்பதை உறுதி செய்வதற்கு, மாநில அரசின் நெடுஞ்சாலைத் துறையில் சாலைப் பாதுகாப்பிற்கென தனியாக ஒரு பிரிவு உருவாக்கப்படுகிறது.
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:-

    சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் படுகாயங்களை பாதியாக குறைக்க வேண்டும் என்பது 2020-ம் ஆண்டிற்குள் அடைய வேண்டிய நிலைக்கத்தக்க வளர்ச்சிக்கான இலக்குகளில் ஒன்றாகும். 2018-ம் ஆண்டில் சிறப்பான சாலை பாதுகாப்பு நடவடிக்கைளுக்கான விருதை, மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு பெற்றது.

    2016-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2019-ம் ஆண்டில் சாலை விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38.87 சதவீதம் குறைந்துள்ளது. தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை திட்டம் 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை திட்டம் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் செயல்படுத்தப்பட்ட பிறகு, அவசர சிகிச்சை பிரிவில் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 8.3 சதவீதத்திலிருந்து 2.7 சதவீதமாக குறைந்துள்ளது.

    தற்போது அணுக வசதியாக அமைந்துள்ள 80 அரசு மருத்துவமனைகள், தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையங்களாகச் செயல்பட்டு வருகின்றன.

    சாலை பாதுகாப்பில் தமிழ்நாட்டின் ஆக்கத்திறனை மேலும் மேம்படுத்தவதற்கும், தவிர்க்கக் கூடிய உயிரிழப்புகள் மற்றும் படுகாயங்களைக் குறைப்பதற்கும், தமிழ்நாடு சாலைப் பாதுகாப்பு இயக்கத்தினை அரசு உருவாக்கும்.

    இந்த இயக்கம் பல்வேறு துறைகளின் செயல்பாடுகளையும் ஒருங்கிணைந்து “சாலை விபத்தில்லா தமிழ்நாடு” என்ற இலக்கை அடைவதற்காக, அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்.

    இத்திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், விபத்துக்களை பொறியியல் சார்ந்த தீர்வு நடவடிக்கைகள் மூலம் சரி செய்தல், ஓட்டுநர் கல்வி, சட்ட அமலாக்கம், விபத்திற்குப் பிந்தைய உயிரிழப்புகளை தடுத்தல் ஆகிய அனைத்து நடவடிக்கைளும் ஒருங்கிணைந்த முறையில் செயல்படுத்தப்படும்.

    நெடுஞ்சாலைகள், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, காவல், போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்களை ஒருங்கிணைத்து, சாலைப் பாதுகாப்பிற்கான நிதி ஒதுக்கீடு ரூ.500 கோடியாக உயர்த்தப்படும்.

    சாலை வடிவமைப்பில் சாலைப் பாதுகாப்பு அம்சங்களும் உள்ளடங்கி இருப்பதை உறுதி செய்வதற்கு, மாநில அரசின் நெடுஞ்சாலைத் துறையில் சாலைப் பாதுகாப்பிற்கென தனியாக ஒரு பிரிவு உருவாக்கப்படும். சென்னை, மதுரை மற்றும் கோவை மாநகராட்சிகளில் சாலைப் பாதுகாப்புப் பிரிவுகள் ஏற்படுத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×