search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வருமானவரி சோதனை
    X
    வருமானவரி சோதனை

    ஸ்ரீவில்லிபுத்தூரில் 4 பால்கோவா கடைகளில் வருமான வரி சோதனை

    வரி ஏய்ப்பு புகார் காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள 4 பால்கோவா கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வைணவ ஸ்தலங்களில் ஒன்றான ஆண்டாள் கோவில் உள்ளது. இங்கு தினமும் பல்வேறு ஊர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    இங்குள்ள ஆண்டாள் கோவிலை போல பால்கோவாவும் பிரசித்தி பெற்றவை. கோவில் மற்றும் பஸ் நிலையத்தை சுற்றி பெரிய மற்றும் சிறிய அளவில் நூற்றுக்கணக்கான பால்கோவா விற்பனை கடைகள் உள்ளன.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் பால்கோவாவை விரும்பி வாங்கிச் செல்கிறார்கள். இதனால் குறிப்பிட்ட கடைகளில் எப்போதும் கூட்டம் அலைமோதும்.

    இந்த நிலையில் கோவில் மற்றும் பஸ் நிலைய பகுதியில் உள்ள வெங்கடேஷ்வரா பால்கோவா கடை, புளிய மரத்தடி பாக்கியலட்சுமி கடை உள்ளிட்ட 4 கடைகளில் வரி ஏய்ப்பு செய்வதாக வருமான வரித்துறைக்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து மதுரை வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து நேற்று மாலை 25 அதிகாரிகள் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தனர். அவர்கள் புகார் கூறப்பட்ட 4 கடைகளிலும், கடை உரிமையாளர்களின் வீடுகளிலும் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கடை உள்புறமாக சாத்தப்பட்டு விற்பனை விவரங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.

    இந்த சோதனை விடிய விடிய நடந்தது. பால்கோவா கடை உரிமையாளர்களின் சொத்து ஆவணங்கள், விற்பனை விவரங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. வருமான வரித்துறையின் சோதனையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டன.

    இன்று அதிகாலை சோதனையை முடித்துக்கொண்டு அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.

    பால்கோவாவுக்கு பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள குறிப்பிட்ட பால்கோவா கடைகளில் தினமும் ரூ. 2 அல்லது ரூ. 3 லட்சத்திற்கு மேல் வியாபாரம் நடைபெறுவதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்குரிய பில் கொடுக்காமல் வியாபாரம் செய்வதாக வருமான வரித்துறைக்கு புகார்கள் சென்றன. அதன் அடிப்படையில் பால்கோவா கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டதாக தெரிகிறது.

    Next Story
    ×