search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோஜா மலர்கள் விலை உயர்வு
    X
    ரோஜா மலர்கள் விலை உயர்வு

    கொடைக்கானலில் ரோஜா மலர்களின் விலை கடும் உயர்வு

    காதலர் தினத்தை முன்னிட்டு கொடைக்கானலில் ரோஜா மலர்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
    கொடைக்கானல்:

    உலகம் முழுவதிலும் காதலர் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. காதலர்கள் தங்கள் அன்பின் அடையாளத்தை வெளிப்படுத்த ரோஜாவை பரிசாக அளித்து வருகின்றனர். அதிலும் பல வண்ண ரோஜாக்கள் ஒவ்வொரு நிறத்துக்கும் ஒவ்வொரு குறியீடு உள்ளதால் அதற்கேற்ற ரோஜாவை தேர்ந்தெடுப்பதில் காதலர்கள் தற்போது மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    காதலர்களின் மனம் கவரும் வகையில் விதவிதமான ரோஜா மலர்கள் விற்பனைக்கு குவிந்துள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதிகளான கவுஞ்சி, பிரகாசபுரம், குண்டுப்பட்டி, பண்ணைக்காடு, தாண்டிக்குடி உள்ளிட்ட கிராமங்களில் காய்கறிகளுக்கு அடுத்தபடியாக காரனேசன் ரோஜா, கொய்மலர்கள் ஆகியவை பல ஏக்கர்களில் சாகுபடி செய்யப்பட்டு வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.

    உயர்ரக பூ வகைகள், மலர் கொத்துகள் ஆகியவையும் தயார் செய்து அனுப்பப்படுகிறது. பண்டிகை மற்றும் திருமண நாட்களிலும் விசே‌ஷ காலங்களிலும் இந்த மலர்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. நாளை காதலர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு வெளியூர்களுக்கு அனுப்பி வைப்பதற்காக விதவிதமான ரோஜா மலர்கள் பேக்கிங் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    சாதாரண நாட்களில் ஒரு கொத்து 100 ரூபாய்க்கு விற்கப்படும் இந்த பூக்கள் தற்போது ரூ.200 முதல் ரூ.300 வரை விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக நர்சரி கார்டன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 3 நாட்களில் மட்டும் தமிழகத்தில் பல்வேறு நகரங்களுக்கும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மும்பை உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    Next Story
    ×