
ஆம்பூர், பிப்.13-
ஆம்பூர் அருகே சொத்து தகராறில் தூங்கிக்கொண்டிருந்த விவசாயி மற்றும் அவரது மனைவியை பெண் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆம்பூர் அடுத்த கம்ம கிருஷ்ணபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 55) விவசாயி. இவருடைய மனைவி விஜயா (40). முருகேசனின் அண்ணன் வெங்கடேசன். இவரது மனைவி சித்ரா (45). இவர்களுக்கு 3 மகன் ஒரு மகள். இதில் 2 மகன்கள் வெங்கடேசன் ஆகியோர் ஏற்கனவே இறந்து விட்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சித்ராவின் 3 வது மகனும் இறந்துவிட்டார். இதனால் சித்ரா மகளுடன் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் இவருக்கும் முருகேசனுக்கும் நிலத் தகராறு ஏற்பட்டது.இதனால் முருகேசனை வெட்டிக் கொலை செய்ய சித்ரா முடிவு செய்தார். நேற்று இரவு முருகேசனும் அவரது மனைவி விஜயாவும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு சுமார் 12 மணியளவில் சித்ரா நைசாக கதவை திறந்து வீட்டுக்குள் சென்றார்.
தூங்கிக் கொண்டிருந்த முருகேசனின் கழுத்து தலைப்பகுதியில் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். வெட்டுப்பட்ட முருகேசன் அலறினார். சத்தம் கேட்டு அவரது மனைவி விஜயா ஓடிவந்து தடுக்க முயன்றார். அவரையும் சித்ரா அரிவாளால் வெட்டிச் சாய்த்தார். பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
வெட்டுப்பட்ட கணவன் மனைவி இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து துடி துடித்தனர். இதில் முருகேசன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
அவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இது தொடர்பாக உமராபாத் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
ஆம்பூர் டி.எஸ்.பி சச்சிதானந்தம் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த விஜயாவை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முருகேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து சித்ராவை கைது செய்தனர். அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. * * * கொலையுண்ட முருகேசன். காயமடைந்த விஜயா, கைது செய்யப்பட்ட சித்ரா.