
அந்தியூர் அடுத்த சங்கராபாளையம் பஞ்சாயத்து தலைவர், சின்னதங்கம் என்கிற ராதாகிருஷ்ணன் (49) கடந்த 3-ம் தேதி பட்டப்பகலில் கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டார்.
காரில் தப்பிய ஒடிய சென்னை சேர்ந்த கூலிபடையினர் சரவணன், பாலமுருகன், ராஜேஷ் ஆகியோரை கவுந்தப்பாடி அருகே போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.
இதில் தப்பியோடிய சிவா, முத்துமாரி ஆகியோரும் ஆப்பக்கூடல் பகுதியில் கைது செய்யப்பட்டனர். இதனை அடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், சங்கரபாளையத்தை சேர்ந்த அரவிந்த் (வயது 26) என்பவரின் தந்தையின் கொலைக்கு பழிக்கு பழி வாங்குவதற்காக ராதாகிருஷ்ணனை கொன்றதாகவும், இதற்கு அரவிந்த் தங்களை ஏவியதாகவும் அவர்கள் தொரிவித்தனர்.
இதனை அடுத்து கடந்த 6-ம் தேதி, அரவிந்த் கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். மேலும் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு, அவரை நேற்று முன்தினம் வெள்ளித்திருப்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
மேலும் கூலிப்படையினர் சொன்ன தகவலின் பேரில், இக்கொலையில் தொடர்புடைய அரவிந்த் மாமாவான, சங்கரபாளையத்தை சேர்ந்த, பிரபாகரன் (42)இவர் சக்தியமங்கலத்தில் போலீஸ் தலைமை ஏட்டாக பணிபுரிந்து வருகிறார்.
அவரை தேடி வந்துள்ளதை அடுத்து அவர் நேற்று சென்னிமலை பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரை கைது செய்தனர். இருவரையும் பவானி ஜே.எம்., நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
பஞ்சாயத்து தலைவர் கொலையில் போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.