search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
    X
    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

    குரூப்-4 தேர்வு முறைகேடு: டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம்காந்தனின் நண்பர் சிக்கினார்

    எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து ஓம்காந்தனின் நண்பரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சென்னை:

    குரூப்-4 மற்றும் குரூப்-2ஏ, கிராம நிர்வாக அதிகாரி தேர்வுகளில் முறைகேடு நடந்து இருப்பதை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் சமீபத்தில் கண்டுபிடித்தது.

    இது தொடர்பான புகாரின் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். குரூப்-2ஏ தேர்வு மோசடி தொடர்பாக 19 பேரும், குரூப் 4 தேர்வு மோசடி தொடர்பாக 19 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கிராம நிர்வாக அதிகாரி முறைகேட்டில் 3 பேர் பிடிபட்டுள்ளனர்.

    தரகர் ஜெயக்குமார்

    சென்னை முகப்பேரை சேர்ந்த தரகர் ஜெயக்குமார் டி.என்.பி.எஸ்.சி. ஊழியர் ஓம்காந்தனுடன் இணைந்து விடைத்தாள்களை திருத்தி குறுக்கு வழியில் பலரை தேர்ச்சி பெற வைத்துள்ளனர்.

    2017-ம் ஆண்டு நடந்த குரூப்-2ஏ தேர்வு முறைகேட்டில் 42 பேர் மோசடியாக தேர்ச்சி பெற்றிருந்தனர். இவர்கள் அனைவரும் பத்திரப்பதிவு துறை, தலைமை செயலகம், ஆர்.டி.ஓ அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பணியாற்றி வரும் நிலையில் அவர்கள் மீதான கைது நடவடிக்கை முழுவீச்சுடன் நடைபெற்று வருகிறது.

    அரசு பணிகளில் உள்ள ஒவ்வொருவராக தேடிப்பிடித்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து ஜெயக்குமார், ஓம்காந்தன் இருவரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    டி.என்.பி.எஸ்.சி. ஊழியரான ஓம்காந்தன் ஏற்பாட்டின்படியே ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களை தேர்வர்கள் தேர்ந்து எடுத்ததும், அதன் பின்னர் ஜெயக்குமாருடன் இணைந்து இந்த மையங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட விடைத்தாள்களை திருத்த, பலர் உதவி செய்துள்ளனர்.

    இது தொடர்பாக சென்னையை சேர்ந்த 3 டிரைவர்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் ஓம்காந்தனின் நண்பர் ஒருவர் சி.பி.சி.ஐ.டி. போலீசிடம் இன்று பிடிபட்டுள்ளார்.

    சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த அவரும் விடைத்தாள்களை திருத்துவதற்கு உதவிகளை செய்து இருக்கலாம் என்றே கருதப்படுகிறது.

    எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து ஓம்காந்தனின் நண்பரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே தரகர் ஜெயக்குமாரிடம் கடந்த 7 நாட்களாக சி.பி.சி.ஐ.டி. போலீசார், போலீஸ் காவலில் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த காவல் முடித்து நாளை மறுநாள் (14-ந் தேதி) போலீசார் ஜெயக்குமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள். ஜெயக்குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது கிடைத்த தகவல்களை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×