search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாக்குதல்
    X
    தாக்குதல்

    ராஜபாளையம் அருகே ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மீது சரமாரி தாக்குதல்

    ராஜபாளையம் அருகே இன்று ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூர் ஊராட்சி மன்றத்தலைவராக சாந்தி என்பவரும், துணைத் தலைவராக கடல்கனியும் உள்ளனர். நேற்று ஊராட்சியில் ராஜீவ்காந்தி கூட்டுக்குடிநீர் திட்டம் தொடர்பாக குழு அமைப்பதற்கான கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் ஊராட்சி தலைவர் சிவகாமிநாதன் மற்றும் 9 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    சாந்தி, கடல்கனி, சிவகாமிநாதன் ஆகியோர், ராஜீவ்காந்தி கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கான குழு உறுப்பினர்களை தன்னிச் சையாக தேர்ந்தெடுத்ததாக தெரிகிறது. இதற்கு 9 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    1-வது வார்டு உறுப்பினர் வேம்பு தலைமையில் இந்த கூட்டத்தை புறக்கணித்து மற்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் ராஜீவ்காந்தி கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கான தீர்மானம் நிறைவேற வில்லை.

    மாவட்ட கலெக்டரிடம் நேற்று இதற்கான குழு உறுப்பினர் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். அந்த காலக்கெடு முடிந்த நிலையில் சொக்கநாதன் புத்தூர் ஊராட்சியில் மட்டும் குடிநீர் திட்டத்துக்கான குழு அமைக்கப்படவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை 1-வது வார்டு உறுப்பினர் வேம்பு, 8-வது வார்டு உறுப்பினர் காசி, 9-வது வார்டு உறுப்பினர் முருகேஸ்வரி ஆகியோர் வீட்டுக்குள் புகுந்த 10-க்கும் மேற்பட்ட கும்பல் அவர்களை சரமாரியாக தாக்கியது. வீட்டில் உள்ள பொருட்களையும் சேதப்படுத்தினர்.

    இது குறித்து வேம்பு கூறுகையில், நேற்று நடந்த ஊராட்சி மன்ற கூட்டத்தில் குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்காததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சிவகாமிநாதன், அவரது மகன் சின்னத்தம்பி உள்பட 10-க்கும் மேற்பட்ட கும்பல் வீட்டுக்குள் புகுந்து சரமாரியாக தாக்கியதாக தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக சேத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×