
பொள்ளாச்சியில் இளம்பெண்கள், கல்லூரி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் பொள்ளாச்சி போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் புகார் கொடுத்த மாணவியின் சகோதரரை தாக்கியதாக மணிவண்ணன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தியபோது அவருக்கும் இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்துக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட 5 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். பின்னர் சேலம் சிறைக்கு மாற்றப்பட்டனர். இந்த பாலியல் வழக்கை முதலில் பொள்ளாச்சி போலீசாரும், பின்னர் சி.பி.சி.ஐ.டி போலீசாரும் விசாரித்தனர். அதன் பின்னர் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் கோவை மற்றும் பொள்ளாச்சியில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கில் கடந்த மே மாதம் கோவை மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் முதல் குற்ற பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு கடந்த 28-ந் தேதி விசாரணைக்கு வந்தது. இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 5 பேரும் பலத்த பாதுகாப்புடன் சேலம் மத்திய சிறையில் இருந்து கோவை அழைத்து வரப்பட்டனர்.
குற்றவாளிகள் 5 பேரையும் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரவி முன்னிலையில் ஆஜர்படுத்தினார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி ரவி இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு தான் உள்ளது என கூறி விசாரணையை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டார்.
பாலியல் பிரிவு வழக்கு என்பதாலும், முக்கிய வழக்கு என்பதாலும், இந்த வழக்கை தலைமை குற்றவியல் நடுவர் மன்றம் விசாரித்தால் அதிகபட்ச தண்டனை வழங்க முடியாது என்பதாலும் விசாரணையை மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிடுகிறேன் என அவர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை மாவட்ட நீதிமன்ற நீதிபதி சக்திவேல் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
இதனை தொடர்ந்து கைதான 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
நீதிபதி சக்திவேல் இந்த வழக்கு விசாரணையை மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டார். மேலும் விசாரணையை வருகிற 25-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். இதனை தொடர்ந்து வருகிற 25-ந் தேதி பொள்ளாச்சி பாலியல் வழக்கு மகளிர் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது. அன்றைய தினம் குற்றவாளிகள் 5 பேரும் மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.