search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    பணம் இரட்டிப்பு தருவதாக ஆசிரியையிடம் ரூ. 12 லட்சம் மோசடி

    போரூர் அருகே ஆசிரியையிடம் ஆசை வார்த்தை கூறி ரூ.12 லட்சம் பணம் மோசடியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    போரூர்:

    கொளத்தூர் அன்னபூர்ணா நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் சிவாஜி. இவரது மனைவி ஸ்ரீபிரியா, பள்ளி ஆசிரியை.

    இவர் வடபழனி போலீசில் புகார் மனு அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    நான் டெய்லர்ஸ் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறேன். என்னுடன் வேலைபார்த்து வரும் ஆசிரியை மூலம் வடபழனி அழகிரி நகர் மெயின் ரோட்டில் அலுவலகம் நடத்தி வந்த சிவகுமார், வினிதா மற்றும் பிரபாகர் ஆகியோர் கடந்த ஆண்டு எனக்கு அறிமுகம் ஆனார்கள்.

    அப்போது அவர்கள் 3பேரும் தங்களது நிறுவனத்தில் ரூ. 50 ஆயிரம் பணம் முதலீடு செய்தால் தினந்தோறும் ரூ. 410 வீதம் 200 நாட்களுக்கு பணம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று ஆசைவார்த்தை கூறினர்.

    இதை உண்மை என்று நம்பி கடந்த ஆண்டு மே மாதம் 7-ந் தேதி ரொக்கமாக ரூ. 2 லட்சம் பணமும், ஆன்லைன் மூலம் ரூ. 10 லட்சம் பணமும் கொடுத்தேன். முதல் மாதம் அவர்கள் சொன்னபடி ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் எனது வங்கி கணக்கில் செலுத்தினர். அதன்பிறகு பணம் எதுவும் வரவில்லை.

    இதுபற்றி சிவகுமாரிடம் கேட்டபோது, ‘எனக்கு தர வேண்டிய பணத்துக்கு பதிலாக செப்டம்பர் மாதம் கார் ஒன்று வாங்கி தருவதாக கூறினார். ஆனால் அவர்கள் கூறியபடி காரும் தரவில்லை.

    கடந்த அக்டோபர் மாதம் அவர்களை தேடி சென்றபோது அலுவலகம் பூட்டிக்கிடந்தது. 3 பேரும் தலைமறைவானது தெரியவந்தது. அனைவரது செல்போனும் “சுவிட்ச்-ஆப்” செய்யப்பட்டு இருந்தது.

    ஆசை வார்த்தை கூறி பணம் மோசடியில் ஈடுபட்ட சிவகுமார், வினிதா, பிரபாகர் ஆகிய 3 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து எனது பணத்தை பெற்று தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட 3 பேரையும் தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×