
ஆசாரிபள்ளத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் அரசு தலைமை மருத்துவமனை உள்ளது.
மருத்துவக்கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரியில் ஏராளமான நர்சுகள் ஷிப்ட் முறையில் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள், பணிக்கு செல்லும்போதும், பணி முடிந்து வீடு திரும்பும் போதும் நர்சுகளுக்கான சீருடையை மாற்றி விட்டு செல்வது வழக்கம்.
இதற்காக ஆஸ்பத்திரியின் பின்பகுதியில் உள்ள ஒரு ஓட்டு கட்டிடத்தில் நர்சுகள் உடை மாற்றும் அறை உள்ளது.
நர்சுகள் உடை மாற்றும் அறை அருகே நேற்று ஒரு வாலிபர் செல்போனுடன் நின்று கொண்டிருந்தார். நீண்ட நேரமாக அறைக்கு அருகே செல்வதும், பின்னர் திரும்பி வருவதுமாக இருந்தார்.
இதனை பார்த்தவர்கள் வாலிபரிடம் சென்று விசாரித்தனர். நர்சுகள் உடை மாற்றும் அறைக்கு அருகே நிற்பது ஏன்? என்றும் கேட்டனர். அந்த வாலிபர், தனது மனைவி நர்சிங் உதவியாளராக இருப்பதாகவும், அவர் உடை மாற்ற சென்றிருப்பதால் அவருக்காக காத்திருப்பதாகவும் கூறினார். இதனை உண்மை என்று நம்பிய மக்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.
பொதுமக்கள் திரும்பி சென்றதும் அந்த வாலிபர் உடை மாற்றும் அறையின் ஜன்னல் அருகே சென்று செல்போன் மூலம் நர்சுகள் உடை மாற்றுவதை படம் பிடித்தார்.
இதை நர்சு ஒருவர் பார்த்து விட்டார். அவர், கூச்சலிட்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வாலிபரை பிடிக்க முயன்றனர். அவர், தப்பியோடினார். அவரை காவலாளிகளும், பொதுமக்களும் விரட்டிச் சென்றனர். ஆஸ்பத்திரிக்கு வெளியே அவரை அனைவரும் சேர்ந்து மடக்கிப்பிடித்தனர்.
பிடிபட்ட வாலிபரிடம் பொதுமக்கள் சம்பவம் பற்றி கேட்டபோது, அவர் பதில் அளிக்க மறுத்தார். அப்போது அங்கு வந்த நர்சுகள், அவர்கள் உடை மாற்றுவதை வாலிபர் படம் பிடித்ததாக கூறினர். உடனே பொதுமக்கள் வாலிபரிடம் இருந்த செல்போனை வாங்கியதோடு அவருக்கு தர்மஅடியும் கொடுத்தனர்.
இத்தகவல் அறிந்து ஆசாரிபள்ளம் போலீசார் அங்கு வந்தனர். அவர்களிடம் பொதுமக்கள் வாலிபரையும், அவரது செல்போனையும் ஒப்படைத்தனர்.
போலீசார் வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அவரது செல்போனையும் ஆய்வு செய்தனர். அதில், நர்சுகள் உடை மாற்றும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
அதனை அவர், நவீன காமிரா மூலம் எடுத்திருப்பதும் தெரிய வந்தது. அந்த காமிரா தொலை தூர காட்சிகளையும் படம் பிடிக்கும் திறன் கொண்டது. அதனை தனியாக வாங்கி செல்போன் காமிராவுடன் இணைத்து படம் எடுத்திருப்பதை கண்டுபிடித்த போலீசார் அந்த படங்களை அழித்ததோடு அவர், இதுபோல வேறு எங்காவது படம் எடுத்தாரா? என்பது பற்றி விசாரித்தனர்.
ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் இதுபோல அடிக்கடி பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் நடந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு நோயாளியுடன் தங்கி இருந்த பெண்ணை ஆஸ்பத்திரி காவலாளி சில்மிஷம் செய்ததாக புகார் எழுந்தது.
இப்போது நர்சுகள் உடை மாற்றுவதை படம் எடுத்த சம்பவம் நடந்துள்ளது. இது அங்கு பணிபுரியும் பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. இந்த சம்பவங்களை கட்டுப்படுத்த ஆஸ்பத்திரி முழுவதும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தி போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.