search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தக்காளி
    X
    தக்காளி

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி, சின்ன வெங்காயம் விலை சரிவு

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி, சின்ன வெங்காயம் விலை சரிந்ததால் விவசாயிகள் வேதனையடைந் துள்ளனர்.

    ஒட்டன்சத்திரம்:

    தென் தமிழகத்தின் மிகப் பெரிய காய்கறி சந்தையாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட் உள்ளது. இங்கிருந்து அண்டை மாநிலமான கேரளாவுக்கு 60 சதவீத காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தினசரி ரூ.1 கோடிக்கும் மேல் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

    மகாராஷ்டிரா மற்றும் ஆந்திர மாநிலங்களில் உற்பத்தி குறைந்ததால் வெங்காயத்தின் விலை உயர்ந்தது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் சிரமம் அடைந்தனர். தற்போது சுற்று வட்டார கிராமங்களான இடையகோட்டை, மூலசத்திரம், கேதையறும்பு, அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், கொசவபட்டி பகுதிகளில் இருந்து சின்ன வெங்காயம் மற்றும் பல்லாரி வரத்து அதிகரித்துள்ளது.

    இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.130 வரை விற்ற சின்ன வெங்காயம் தற்போது ரூ.30 முதல் ரூ.35 வரை விலை கேட்கப்படுகிறது. வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் தற்போது விலை குறைந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    பல்லாரி ஒரு கிலோ ரூ.30-க்கு விலை கேட்கப்படுகிறது. பீன்ஸ் ரூ.20, பீட்ரூட் ரூ.20, பூசணிக்காய் ரூ.12, கத்தரிக்காய் ஒரு பை ரூ.800, மல்லி ஒரு கட்டு ரூ.10 என்ற விலையில் விற்பனையானது.

    தக்காளி விலை கடுமையாக சரிந்து 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனையாகிறது. பறிப்பு கூலிக்கு கூட பணம் கிடைக்காததால் வேதனையடைந்த விவசாயிகள் தக்காளிகளை குப்பையில் வீசிச் சென்றனர். விலை உயர்ந்தாலும், குறைந்தாலும் விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே இதற்கு தீர்வு காண வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×