search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் எஸ்பி வேலுமணி
    X
    அமைச்சர் எஸ்பி வேலுமணி

    தமிழகத்தில் 1 லட்சத்து 12 ஆயிரத்து 110 புதிய சுய உதவிக் குழுக்கள் அமைப்பு- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

    தமிழகத்தில் 1 லட்சத்து 12 ஆயிரத்து 110 புதிய சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
    கோவை:

    மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மண்டல அளவிலான வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார். 17 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.1.14 கோடி மதிப்பிலான வங்கி கடன் தொகையை அமைச்சர் வழங்கி பேசும்போது கூறியதாவது:-

    ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தால் 6.69 லட்சம் சுயஉதவிக்குழுக்கள், 100.40 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. இக்குழுக்களின் மொத்த சேமிப்பு ரூ.7,726கோடி ஆகும்.

    2011-ம் ஆண்டு முதல் இதுவரை 18.64 லட்சம் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.63,878 கோடி வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் முயற்சியால் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ரூ.26,168.24 கோடி, நடப்பாண்டில் மட்டும் ரூ.11,246.96 கோடி மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 9810 சுயஉதவிக்குழுக்களுக்கு வட்டி மானியத்தொகையாக ரூ.9.94 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. 89,747 இளைஞர்களுக்கு தொழில் திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதில் 52,785 நபர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். மாவட்டம் மற்றும் வட்டார அளவில் மொத்தம் 1,356 வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டத்தில் 13.44 லட்சம் நபர்கள் பங்கேற்று அதில் 2.56 லட்சம் நபர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

    7,436 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு ரூ.533.55 கோடி சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்பட்டுள்ளது.

    2011-ம் ஆண்டு முதல் ஏழை மகளிரைக் கொண்டு 1 லட்சத்து 12 ஆயிரத்து 110 புதிய சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    கோவை மாவட்டத்தில் ஊரக பகுதியில் 5,742 புதிய சுய உதவிக் குழுக்கள் மற்றும் நகர்புற பகுதிகளில் 4,481 சுய உதவிக்குழுக்களும் மொத்தம் 10,223 சுய உதவிக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. 61,981 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1961.9 கோடி வங்கிக் கடன் இணைப்பாக வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் இதுவரை ரூ.405 கோடி வங்கி கடன் இணைப்பாக மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    12 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.2,28 கோடி பெருங்கடனாக வழங்கப்பட்டுள்ளது. 1020 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.153 கோடி ஆதார நிதியாக வழங்கப்பட்டுள்ளது.

    கோவை மாவட்டத்தில் 2017-18 முதல் 12,040 மகளிருக்கு ரூ.29.22 கோடி மானியத்துடன் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் கலெக்டர் ராஜாமணி, ஏ.கே.செல்வராஜ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுணன், வி.சி.ஆறுக்குட்டி, எட்டிமடை சண்முகம், ஒ.கே.சின்னராஜ், கஸ்தூரிவாசு, வ.பி.கந்தசாமி, மாவட்ட ஊராட்சி தலைவர் சாந்திமதி, துணைத்தலைவர் அமுல் கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×