search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிஎன்பிஎஸ்சி
    X
    டிஎன்பிஎஸ்சி

    போலீஸ்காரரிடம் ரூ.3½ லட்சம் கொடுத்து தேர்ச்சி பெற்ற விழுப்புரம் விஏஓ

    விஏஓ தேர்வில் தேர்ச்சி பெற வைப்பதற்காக போலீஸ்காரிடம் ரூ.3.5 லட்சம் பணம் கொடுத்ததாக, கைதான விழுப்புரம் மாவட்டம் அரியூரை சேர்ந்த விஏஓ நாராயணன் தெரிவித்துள்ளார்.

    விழுப்புரம்:

    டி.என்.பி.சி. குரூப்-4 மற்றும் குரூப்-2 ஏ ஆகிய தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி. ஜாபர்சேட்டின் நேரடி மேற்பார்வையில் விசாரணை நடந்து வருகிறது. தேர்வில் வெற்றி பெற பலர் பணம் கொடுத்து மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் சென்னை மாநகர போலீசில் பணிபுரிந்து வந்த போலீஸ்காரர்கள் சித்தாண்டி, பூபதி, விழுப்புரம் மாவட்டம் அரியூர் கிராமத்தை சேர்ந்த வி.ஏ.ஓ. நாராயணன் உள்பட 32 பேரை கைது செய்தனர்.

    இந்த முறைகேடுக்கு மூளையாக இருந்த ஜெயக்குமார் கோர்ட்டில் சரண் அடைந்தார். இதனையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    ஆனாலும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. கைதான விழுப்புரம் மாவட்டம் அரியூரை சேர்ந்த வி.ஏ.ஓ. நாராயணனிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது.

    கடந்த 2016-ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி நடத்திய வி.ஏ.ஓ தேர்வில் நாராயணன் தன்னை தேர்ச்சி பெற வைப்பதற்காக போலீஸ்காரர் பூபதி என்பவரிடம் ரூ.3½ லட்சம் பணம் கொடுத்துள்ளார். அதேபோல தனக்கு தெரிந்த 5 பேரை தேர்ச்சி பெற வைக்க அவர்களிடம் ரூ.34 லட்சம் பணம் வாங்கி போலீஸ்காரர் பூபதியிடம் கொடுத்துள்ளார்.

    இந்த தொகை ஜெயகுமாருடன் வழங்கப்பட்டு 6 பேரும் வி.ஏ.ஓ.வாக வேலைக்கு சென்றுள்ளனர். குரூப்-2 ஏ தேர்வில் நாராயணன் தனது மனைவி மகாலட்சுமி உள்பட 7 பேரை தேர்ச்சி பெற வைக்க போலீஸ்காரர் பூபதி வழியாக ஜெயகுமாரிடம் ரூ. 73 லட்சம் பணம் கொடுத்துள்ளார். சரிபார்ப்பின்போது மகாலட்சுமியின் சான்றிதழ் நிராகரிக்கப்பட்டுள்ளது.

    மற்ற 6 பேரும் தேர்ச்சி பெற்று அரசு வேலையில் உள்ளனர். மேற்கண்டவை விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடரந்து அதிரடி விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×