search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நத்தம் பகுதியில் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட 2 பேரை அப்பகுதி மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
    X
    நத்தம் பகுதியில் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட 2 பேரை அப்பகுதி மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    திருப்பத்தூரில் வீட்டில் திருடிய கொள்ளையர்களை மடக்கி பிடித்த பொதுமக்கள்

    திருப்பத்தூரில் பட்டப்பகலில் ஆளில்லாத வீட்டில் திருடிய கொள்ளையர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அடுத்த நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது35). இவர் சுந்தரம்பள்ளியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். மதிய உணவை அவரது மனைவி எடுத்துச் செல்வது வழக்கம். நேற்று வழக்கம் போல வீட்டை பூட்டி விட்டு கணவருக்கு உணவு கொடுக்க சென்று விட்டார்.

    இந்நிலையில் மூர்த்தியின் பூட்டிய வீட்டுக்குள் இருந்து ஆட்கள் நடமாடுவது போன்ற சத்தம் கேட்கவே சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டை சுற்றி வந்துள்ளனர்.

    அப்போது வீட்டுக்குள் 2 மர்ம நபர்கள் இருப்பது தெரியவந்தது. மூர்த்தியும். அவரது மனைவியும் இல்லாத நேரத்தில் யார் உள்ளே இருக்கிறார்கள்? என்று சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் உள்ளே செல்ல முயன்றனர்.

    பொதுமக்கள் வருவதைப் பார்த்த மர்ம நபர்கள் அங்கிருந்து சுவர் ஏறிக்குதித்து தப்பியோட முயன்றனர். ஆனால், அவர்களை விரட்டிப்பிடித்த கிராம மக்கள் அருகில் உள்ள கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். அவர்களிடம் இருந்து 20 பவுன் நகை, வெள்ளி பொருட்களை கிராம மக்கள் மீட்டனர்.

    இதுகுறித்து தகவல் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அங்கு வந்தனர். நடந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்து விட்டு கொள்ளையர்களை மீட்டுச்செல்ல முயன்றனர்.

    ஆனால், போலீசாரிடம் கொள்ளையர்களை ஒப்படைக்க அப்பகுதி மக்கள் மறுத்து விட்டனர். இதனால், போலீசாருக்கும் கிராம மக்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் மக்கள் மறியலில் இறங்கியதால் அங்கு பதட்டம் நிலவியது.

    இதுகுறித்து கந்திலி இன்ஸ்பெக்டர் உலகநாதன் பிடிபட்ட கொள்ளையர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராம மக்களிடம் உறுதியளித்த பிறகே கொள்ளையர்களை போலீசாரிடம் மக்கள் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் அவர்கள் இருவரும் பெங்களூரைச் சேர்ந்த ராஜிவ் (35), கணேசன் (45) என்பதும், கிராமப்புறங்களில் உள்ள ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் என்பதும் தெரியவந்தது.

    Next Story
    ×