search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயக்குமார்
    X
    ஜெயக்குமார்

    டிஎன்பிஎஸ்சி முறைகேடு- சரண் அடைந்த ஜெயக்குமாருக்கு 7 நாள் சிபிசிஐடி காவல்

    டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜெயக்குமாரை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க, சிபிசிஐடிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
    சென்னை:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. சார்பில் நடத்தப்பட்ட குரூப்-4 மற்றும் குரூப்-2ஏ தேர்வு முறைகேடு பற்றி தினமும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கின்றன.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் குரூப்-4 தேர்வை எழுதிய பலரிடம் முகப்பேரைச் சேர்ந்த தரகர் ஜெயக்குமார், பண வசூலில் ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்தது.

    இதற்கு டி.என்.பி.எஸ்.சி. ஊழியரான ஓம்காந்தன் உடந்தையாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    2012-ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஓம்காந்தனுடன், ஜெயக்குமாருக்கு 2018-ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஓம்காந்தன் அறிவுரைபடி ஜெயக்குமாரிடம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்தவர்கள் ராமேசுவரம் மையத்தை தேர்வு செய்து குரூப்-4 தேர்வை எழுதியதும் அம்பலமானது.

    டிஎன்பிஎஸ்சி அலுவலகம்

    பணம் கொடுத்தவர்களின் விடைத்தாள்களை மட்டும் நடுவழியில் வேனை நிறுத்தி எடுத்து திருத்தி ஜெயக்குமார் முறைகேட்டில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்காக அழியும் மை கொண்ட பேனாவை ஜெயக்குமாரின் ஆலோசனையின் பேரில் தேர்வு எழுதியவர்கள் பயன்படுத்தியதும் தெரியவந்தது.

    இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த தரகர் ஜெயக்குமார் நேற்று மதியம் சைதாப்பேட்டை கோர்ட்டில் திடீரென சரண் அடைந்தார்.

    ஜெயக்குமார் தாடி-மீசையுடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு சன்மானம் வழங்கப்படும் என்று போலீசார் அறிவித்திருந்த நிலையில்தான் அவர் போலீசில் சிக்காமல் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

    இதன் பின்னர் வெளியான படங்களில் தாடி-மீசை இல்லாமல் ஜெயக்குமார் காணப்பட்டார்.

    இதன் மூலம் மாறு வேடத்தில் சுற்றி திரிந்ததும் உறுதியானது.

    நேற்று சரண் அடைந்த ஜெயக்குமாரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. அவரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்றே மனுதாக்கல் செய்த னர்.

    இந்த மனு மீதான விசாரணை இன்று எழும்பூர் கோர்ட்டில் நடைபெற்றது. இதற்காக இன்று மதியம் 11.50 மணி அளவில் ஜெயக்குமார், எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஜெயக்குமாரை காவலில் எடுக்க அனுமதி கேட்டனர்.

    சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு செல்ல சம்மதமா ? என ஜெயக்குமாரிடம் நீதிபதி கேட்டார். அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், நான் தவறு செய்யவில்லை என்று கூறி, கண்ணீர் விட்டு அழுதார். அதன்பின்னர் சிபிசிஐடி மனு மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. 

    விசாரணை முடிந்து இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெயக்குமாரை 7 நாட்கள் சிபிசிஐடி காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிடடார். இதையடுத்து இன்று முதல் ஜெயக்குமாரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட உள்ளது. 

    குரூப்-4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட ஜெயக்குமார், தேர்வு எழுதிய பலரிடம் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றிருப்பது அம்பலமானது. 

    இந்த பணத்தை அவர் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் சிலருக்கு வாரி வாரி வழங்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது தொடர்பான விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

    டி.என்.பி.எஸ்.சி-யில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அதிகாரி ஒருவர் உள்பட பலர் தேர்வு முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தரகர் ஜெயக்குமாரிடம் போலீஸ் காவலில் இதுபற்றி தீவிரமாக விசாரணை நடத்தப்படும். விசாரணையின் முடிவில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகளும் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    Next Story
    ×