search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமாண்டோ குழுவினர் பாம்பன் ரெயில் பாலத்தின் பாதுகாப்பை ஆய்வு செய்தபோது எடுத்த படம்.
    X
    கமாண்டோ குழுவினர் பாம்பன் ரெயில் பாலத்தின் பாதுகாப்பை ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

    பாம்பன் ரெயில் பாலம் பாதுகாப்பு குறித்து தமிழக கமாண்டோ படை சூப்பிரண்டு ஆய்வு

    பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து பாம்பன் ரெயில் பாலத்தில் தமிழக கமாண்டோ படை சூப்பிரண்டு தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.
    ராமேசுவரம்:

    ராமேசுவரத்திற்கு மிக அருகில் இலங்கை கடல் பகுதி உள்ளதால், தமிழகத்திலேயே இந்த பகுதி மிக முக்கியத்துவம் வாய்ந்த கடல் பகுதியாக கருதப்படுகிறது. அது போல் மும்பையில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு பின்பு இந்தியா முழுவதும் உள்ள கடல் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

    மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பின்பு இந்தியாவில் உள்ள முக்கிய புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்கும் ராமேசுவரம் கோவிலிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அத்துடன் கோவிலின் 4 வாசல்களிலும் துப்பாக்கியுடன் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் போலீசாரின் சோதனைக்கு பின்பே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் செல்போன், கேமரா கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் ராமேசுவரம் தீவை இணைப்பதில் முக்கிய பங்கு வகித்து வரும், பாம்பன் ரெயில்வே பாலத்தின் பாதுகாப்புகளை பலப்படுத்துவது குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழக கமாண்டோ படை சூப்பிரண்டு ராஜேந்திரன் தலைமையில் ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 10 பேர் சென்னையில் இருந்து நேற்று காலை ரெயில் மூலமாக ராமேசுவரம் வந்தனர்.

    அவர்கள் முதலில் பாம்பன் ரெயில் நிலையத்தை பார்வையிட்ட பின்பு, ரெயில் பொறியாளர் அலுவலகம் சென்றனர். அங்கு இருந்த ரெயில் பாலத்தின் பொறியாளர்களிடம் ரெயில் பாலம் கட்டப்பட்ட ஆண்டு, கடலில் அமைந்துள்ள பாலத்தின் துண்கள், கர்டர்களின் எண்ணிக்கை, தினமும் எத்தனை முறை பாலம் வழியாக ரெயில்கள் வந்து செல்லும், மைய பகுதியில் உள்ள தூக்குப்பாலத்தில் பாதுகாப்பில் உள்ளவர்கள் எத்தனை பேர், ரெயில் பாலத்தில் இது வரையிலும் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றுள்ளதா என்பது உள்ளிட்ட முழு விவரங்களையும் கேட்டு சேகரித்து கொண்டனர்.

    மேலும் அருகே கட்டப்படவுள்ள புதிய பாலத்தின் விவரங்களையும் கேட்டனர். தொடர்ந்து அங்கிருந்து நடந்தே ரெயில் பாலம் சென்ற கமாண்டோ படை குழுவினர், ரெயில் பாலத்தை முழுமையாக பார்வையிட்டதுடன் மைய பகுதியில் உள்ள தூக்குப் பாலத்தையும் பார்வையிட்டு பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து உச்சிப்புளியில் உள்ள பருந்து இந்திய கடற்படை விமான தளத்தை ஆய்வு செய்த தமிழக கமாண்டோ படை குழுவினர் இன்று (புதன்கிழமை) ராமேசுவரம் பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாம் மணிமண்டபத்தில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்கின்றனர்.
    Next Story
    ×