search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் சந்தீப் நந்தூரி
    X
    கலெக்டர் சந்தீப் நந்தூரி

    முதல்-அமைச்சர் விருதுக்கு விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

    2018-19 மற்றும் 2019-20-ம் ஆண்டுக்கான முதல்-அமைச்சர் மாநில விளையாட்டு விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆண்டுதோறும் சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் 2 விளையாட்டு வீரர்கள், 2 வீராங்கனைகள், 2 பயிற்றுனர்கள், 2 உடற்கல்வி இயக்குனர் அல்லது உடற்கல்வி ஆசிரியர்களுக்கு முதல்-அமைச்சர் மாநில விளையாட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது. இதேபோன்று விளையாட்டு போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துனர், ஒரு நிர்வாகி, ஓர் ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர், ஒரு ஆட்ட நடுவர், நடுவர், நீதிபதி ஆகியோருக்கும் விருது வழங்கப்படுகிறது.

    இந்த விருதுக்கு முந்தைய 2 ஆண்டு செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதன்படி 2018-19 மற்றும் 2019-20-ம் ஆண்டுக்கான விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இந்த விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளாக வசித்து வர வேண்டும். தமிழ்நாட்டுக்காக 2 முறை தமிழக அணியில் கலந்து கொண்டு விளையாடி, இந்தியா சார்பில் விளையாடியவர்கள், இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டவர்கள், தமிழ்நாட்டில் பணியின் நிமித்தம் குறைந்தது 5 ஆண்டுகளாக வசித்து வரும் முப்படை, ரெயில்வே, போலீஸ், தபால் மற்றும் தொலைதொடர்பு துறை மற்றும் இதர துறைகளில் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    2-வது முறையாக விருது வழங்கப்படாது. விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தங்களது சான்றிதழ்களை சான்றொப்பத்துடன் இணைக்க வேண்டும். ஒலிம்பிக் போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள், ஆசிய விளையாட்டு போட்டிகள், சர்வதேச ஒலிம்பிக் குழு அங்கீகாரத்துடன் நடத்தப்படும் போட்டிகள், தெற்காசிய விளையாட்டு போட்டிகள், தேசிய விளையாட்டு போட்டிகள், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு இணையம் நடத்தும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அழைப்பு போட்டிகள் மற்றும் மண்டலங்களுக்கு இடையேயான போட்டிகள் கருத்தில் கொள்ளப்பட மாட்டாது.

    விருதுக்கு தகுதியுள்ள விளையாட்டு வீரர்கள் தமிழ்நாடு மாவட்ட விளையாட்டு அலுவலர், முதன்மை கல்வி அலுவலர், முதன்மை உடற் கல்வி அலுவலர் மூலமாகவும், மற்ற விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் உரிய வழிமுறைகளின்படி உறுப்பினர் செயலருக்கு விண்ணப்பங்கள் வந்து சேரும் வகையில் அனுப்ப வேண்டும்.

    இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் விரிவான விதிமுறைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சென்னை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு வருகிற 14-ந் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×