search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    அமைச்சர் ஆதரவாளர் கொலையில் மேலும் 4 பேர் கைது

    அமைச்சர் கந்தசாமி ஆதரவாளர் கொலையில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    பாகூர்:

    கிருமாம்பாக்கம் அருகே பிள்ளையார்குப்பம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சாம்பசிவம் (வயது 36). தொகுதி இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளரான இவர் அமைச்சர் கந்தசாமியின் தீவிர ஆதரவாளர் ஆவார்.

    கடந்த 31-ந் தேதி காலை சாம்பசிவம் தனது தங்கை திருமண நிகழ்ச்சிக்காக உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க வீட்டில் இருந்து காரில் புறப்பட்டு வந்தார்.

    கிருமாம்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளி அருகே வேகத்தடையில் கார் மெதுவாக வந்தபோது, அங்கு பதுங்கி இருந்த மர்ம கும்பல் காரின் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியது.

    தன்னை கொல்ல மர்ம கும்பல் வந்திருப்பதை அறிந்த சாம்பசிவம் அவர்களிடம் தப்பிக்க காரில் இருந்து இறங்கி ஓடினார்.

    அப்போது அந்த கும்பல் சாம்பசிவத்தை வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டது.

    இந்த கொலை தொடர்பாக கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்று நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டி கொலை செய்யப்பட்ட சாம்பசிவத்தின் மைத்துனரான வீரப்பனை கொலை செய்த கும்பலே சாம்பசிவத்தையும் கொலை செய்தது தெரியவந்தது.

    மேலும் விசாரணையில் வீரப்பன் கொலைக்கு சாம்பசிவம் முக்கிய சாட்சியாக இருந்ததால் அவரை கொலை செய்தது தெரியவந்தது.

    இந்த கொலை தொடர்பாக கிருமாம்பாக்கத்தை சேர்ந்த அமுதன், கூடப்பாக்கத்தை சேர்ந்த அன்பு என்ற அன்பரசன் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.

    இதில், முக்கிய குற்றவாளிகளான அமுதன், அன்பு மற்றும் கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த பாக்கியராஜ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து மற்ற குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் சாம்பசிவம் கொலையில் தொடர்புடைய கூடப்பாக்கம் காலனியை சேர்ந்த மணிபாலன், சார்லஸ், கவியரசு, வழுதாவூரை சேர்ந்த ஜெகன் ஆகிய 4 பேரை அபிஷேகப்பாக்கம் பகுதியில் பதுங்கி இருந்த போது அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது:-

    சாம்பசிவத்தை கொலை செய்ய அமுதன், கூடப்பாக்கத்தை சேர்ந்த அவரது நண்பரான அன்புவின் உதவியை நாடினார்.

    இதையடுத்து அன்பு எங்களிடம் பேசி கூலிப் படையாக இருந்து சாம்பசிவத்தை கொலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதனை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்.

    சாம்பசிவத்தை கொல்வதற்கு முன்பு நாங்கள் அனைவரும் அபிஷேகப்பாக்கத்தில் உள்ள ஒரு விவசாய மோட்டார் கொட்டகையில் தங்கி 3 நாட்களாக திட்டம் தீட்டினோம்.

    எங்களுக்கு மது மற்றும் உணவு பொருட்களை அமுதனும், அன்புவும் வாங்கி கொடுத்தனர். மோட்டார் கொட்டகையிலேயே வெடிகுண்டு தயாரித்தோம்.

    மேலும் கொலைக்கு தேவையான வீச்சரிவாளையும் தயார் நிலையில் வைத்திருந்தோம்.

    சம்பவத்தன்று காலை எங்களை அமுதன் கிருமாம்பாக்கத்துக்கு வரவழைத்தார். அங்குள்ள அரசு பள்ளி அருகே நாங்கள் வெடிகுண்டு மற்றும் வீச்சரிவாளுடன் சாம்பசிவத்தை கொல்ல மறைந்து இருந்தோம்.

    அப்போது சாம்பசிவம் காரில் வந்தபோது அவர் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    சாம்பசிவம் கொலையில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.

    இதுதொடர்பாக சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×