search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாராயணசாமி
    X
    நாராயணசாமி

    சென்னையிலிருந்து 500 தொழிற்சாலைகள் புதுவைக்கு இடம்பெயர்கிறது- நாராயணசாமி

    சென்னையிலிருந்து சுமார் 500 தொழிற்சாலைகள் புதுவைக்கு வர உள்ளதாகவும் புதுவையில் உள்ள தொழிற்சாலைகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
    புதுச்சேரி:

    புதுவை கல்வி இயக்ககம் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு இணைந்து நவீனகால கற்பித்தலின் பரிணாமம் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கை ஓட்டல் தி ரெசிடன்சியில் நடத்தியது. சி.ஐ.ஐ. தலைவர் கலைச்செல்வன் வரவேற்றார்.

    பயிற்சி முகாமை முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-

    இந்திய தொழில் கூட்டமைப்பு புதுவையில் தொழிற்சாலைகள் கொண்டுவர பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இதில் 90 சதவீத கருத்துக்களை ஏற்றுள்ளோம். 2016-ம் ஆண்டு இந்திய தொழில் கூட்டமைப்பு ஆலோசனையின்படி தொழில்கொள்கை உருவாக்கி தந்தோம். தொழில் தொடங்க எளிய முறையில் அனுமதி பெறவும் வழி செய்துள்ளோம். மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் வர உள்ளது. இதற்கு சலுகை வேண்டும் என கேட்டுள்ளனர். அதையும் தருவோம். தொழிற்சாலை பெருகவும், தொழிலை உருவாக்கவும் அரசு தொடர்ந்து பல முயற்சிகளை எடுத்து வருகிறது. சென்னையிலிருந்து சுமார் 500 தொழிற்சாலைகள் புதுவைக்கு வர உள்ளது.

    புதுவையில் உள்ள தொழிற்சாலைகளை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. சமீபத்தில் சிங்கப்பூர் சென்று வந்தோம். அது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அகில உலக செய்தியாகவும் மாறியது. எங்கள் சொந்த செலவில் சிங்கப்பூர் சென்றோம். சிங்கப்பூர் தொழிலதிபர்கள் புதுவையில் தொழில்தொடங்க மிகவும் ஆர்வமாக உள்ளனர். சிங்கப்பூர் நிறுவன நிர்வாகிகள் என்னை சந்தித்து பேசினர். புதுவையில் கிரீன் ஏர்போர்ட் கொண்டுவர விருப்பம் தெரிவித்துள்ளனர். தகவல் தொழில்நுட்ப பூங்கா கொண்டுவந்து 2 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்பது என் விருப்பம். ஆனால் எனக்கு இருக்கும் தொல்லைக்கு இரவில் தூங்கக்கூட முடியவில்லை.

    புதுவையில் பல்வேறு சாதகமான சூழல்கள் உள்ளது. படித்த இளைஞர்களும் உள்ளனர். ஆனால் தொழில் தொடங்க ஆயிரம் கேள்விகள் உண்டாக்கி தடைகளை உருவாக்குகின்றனர். புதுவையில் சுற்றுலா பெரியளவில் வளர்ந்துள்ளது. பிற மாநிலங்களில் மக்கள் தொகையில் 6 சதவீதத்தினருக்குத்தான் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் புதுவையில் 13 சதவீதத்தினருக்கு வேலை கிடைத்துள்ளது.

    சுற்றுலா மூலம் பல தொழில்கள் பெருகியுள்ளதே இதற்கு காரணம். 14 லட்சம் மக்கள் தொகையில் ஒன்றரை லட்சம் பேர் தனியார் துறையில் பணி புரிகின்றனர். அரசு ஊழியர்கள் 30 ஆயிரம் பேர் உள்ளனர். நீர் விளையாட்டு, தீம் பார்க், குரூஸ் உள்ளிட்டவற்றை கொண்டுவந்தால் இன்னும் வேலைவாய்ப்பு பெருகும். சேதாராப்பட்டில் 900 ஏக்கர் நிலமும், காரைக்காலில் 600 ஏக்கர் நிலமும் உள்ளது.

    இங்கு தொழிற்சாலைகளை கொண்டுவரலாம். இதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் இதற்கான கோப்பை டெல்லிக்கு அனுப்பிவிட்டனர். 10 முறை டெல்லிக்கு படையெடுத்தும் அதற்கு அனுமதி பெற முடியவில்லை. புதுவை விமானநிலையத்தை விரிவாக்கம் செய்ய முடியாது. சேதாராப்பட்டில் 300 ஏக்கரில் கிரீன் ஏர்போர்ட் கொண்டுவரலாம். அரசு ஊழியர்களில் 30 ஆயிரம் பேரில் 9 ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர். பட்ஜெட்டில் 8 சதவீத நிதி கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வித்துறையில் ஆசிரியர் பற்றாக்குறையும் தீர்க்கப்படுகிறது. ஆனால் மாணவர்கள் எங்கே? அரசு பள்ளிகளில் தரம் இருந்தால் மாணவர்கள் தானாகவே முன்வந்து சேர்வர். தனியார் பள்ளிக்கு செல்ல மாட்டார்கள்.

    தற்போது காலம் மாறி வருகிறது. புத்தகம் இல்லாத இணையவழி கல்வி அதிகரித்து வருகிறது. மாணவர்களுக்கு அரசு இணையவழி கல்விக்காக ஐபேட் வாங்கித்தர தயாராக உள்ளது. ஆனால் ஆசிரியர்கள் புத்தகம் இல்லாமல் பாடம் நடத்த தயாரா? கல்வியில் ஒளிப்பட செயல்விளக்க கல்வி வந்துவிட்டது. கடந்தகாலத்தைவிட புதுவையில் அதிக மாணவர்கள் பொதுத்தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

    நமக்கு நிதி பற்றாக்குறை பெரிய பிரச்சினையாக உள்ளது. தமிழகத்தில்கூட 48 சதவீதம் நிதியை மத்திய அரசு தருகிறது. ஆனால் புதுவைக்கு 26 சதவீதம்தான் நிதி கிடைக்கிறது. வணிகவரி, கலால், பத்திரப்பதிவு, போக்குவரத்து ஆகியவற்றின்மூலம்தான் வருமானம் பெறுகிறோம். 65 சதவீத நிதி இதிலிருந்து கிடைக்கிறது. தொடர்ந்து மத்திய அரசை நிதி கமி‌ஷனில் புதுவையை சேர்க்க வலியுறுத்தி வருகிறோம். வரும் பட்ஜெட்டில் ரூ.200 கோடி மத்திய அரசு உயர்த்தி தர உள்ளது. ஆண்டுதோறும் 10 சதவீதம் உயர்த்த வேண்டும். பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதியில் 95 சதவீதத்தை செலவு செய்துள்ளோம்.

    சிறப்பான நிர்வாகம் தரும் யூனியன் பிரதேசம் என புதுவை பல விருதுகளை பெற்றுள்ளோம். அரசின் கையை கட்டிப்போட்டே நாம் பல்வேறு சாதனைகளை செய்துள்ளோம். மத்திய அரசிடம் நாம் கடன் கேட்கவில்லை. உரிமைகளைத்தான் கேட்கிறோம். கல்வித்துறையில் நாம் அடைந்துள்ள வளர்ச்சிக்கு கூட்டு முயற்சிதான் காரணம். கல்வியின் தரத்தை இன்னும் உயர்த்த வேண்டும். கல்வி கடல்போன்றது.

    எந்த வயதிலும் எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம். நான் எம்.பி.யான பிறகுதான் எம்.எல். படித்தேன். புதுவைக்கு வரும் தொழிற்சாலைகளிடம் உங்களின் சமூக பங்களிப்பு என்ன? என கேள்வி கேட்டேன். இதன்மூலம் புதுவையில் 133, காரைக்காலில் 80 பள்ளிகளும் ஸ்மார்ட் பள்ளிகளாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இதுபோன்ற பயிற்சிகள் மூலம் தங்கள் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கருத்தரங்கில் அமைச்சர் கமலகண்ணன், எம்எல்ஏ சிவா, வளர்ச்சி ஆணையர் அன்பரசு, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு, சமக்ரசிக்ஷா மாநில திட்ட இயக்குனர் தினகர் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் கல்வியாளர்கள், பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், தன்னார்வ அமைப்பினர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். தி கிரேண்ட் டெக்னாலஜி தலைவர் மோனீஷ் நன்றி கூறினார்.

    Next Story
    ×