search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செந்தில் பாலாஜி
    X
    செந்தில் பாலாஜி

    செந்தில் பாலாஜியை கைது செய்ய கூடாது- ஐகோர்ட்

    விசாரணைக்கு அழைத்து நோட்டீஸ் அனுப்பும் வரை செந்தில் பாலாஜியை கைது செய்யக் கூடாது என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை,

    அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருக்கும் செந்தில் பாலாஜி கடந்த 2011 - 2016-ம் ஆண்டில் அ.தி.மு.க.வில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்தார். கடந்த 2015-ம் ஆண்டு அவருக்கு எதிராக சென்னை அம்பத்தூரை சேர்ந்த கணேஷ்குமார், தேவசகாயம் உள்ளிட்டோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரில், செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 81 பேரிடம் ரூ.1 கோடியே 62 லட்சம் மோசடி செய்துவிட்டதாக புகார் செய்யப்பட்டது.

    பின்னர் சென்னை ஐகோர்ட்டு பரிந்துரையின் பேரில் போலீசார் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தனர். இதையடுத்து செந்தில்பாலாஜி, பாஸ்கர் கேசவன் உள்பட 12 பேர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் உள்பட பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக சென்னை ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜி கடந்த 2017-ம் ஆண்டு முன்ஜாமீன் மனுத்தாக்கல் செய்தார். அவருக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து இந்த மோசடி வழக்கு எந்தவித முன்னேற்றம் எதுவும் இல்லாமல் இருந்தது.

    இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான அருண்குமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு மனுத்தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில், எழும்பூர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் செந்தில் பாலாஜி மற்றும் வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர்கள் பெயர்கள் இடம் பெறவில்லை. எனவே உரிய முறையில் விசாரணை நடத்திட உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    அவருடைய மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கை உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும். 6 மாதத்துக்குள் மீண்டும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கடந்த நவம்பர் மாதம் 27-ந்தேதி உத்தரவிட்டனர்.

    சென்னை ஐகோர்ட்டு உத்தரவையடுத்து செந்தில்பாலாஜி மீதான மோசடி வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது.

    இந்த நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் சரவணகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார் சென்னை மந்தைவெளி திருவேங்கடம் தெருவில் உள்ள செந்தில் பாலாஜி வீட்டுக்கு  வந்தனர். வீட்டில் யாரும் இல்லாமல் பூட்டி கிடந்தது.

    இதையடுத்து அவருடைய வீட்டுக்கு போலீசார் சீல் வைத்தனர். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் வழங்கக் கோரி செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் புகாரில் தன்னுடைய பெயர் இல்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தன் மீது பொய்யாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    கடந்த 2017-ஆம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணை தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் எனக்குச் சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

    அடுத்த கட்டமாக என்னை கைது செய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கக் கோரி நீதிபதி என்.சேஷசாயி முன் வெள்ளிக்கிழமை முறையீடு செய்யப்பட்டது. 
    சென்னை ஐகோர்ட்டு
    இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த வழக்கை வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்திருந்தார். வழக்கை இன்று விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு, விசாரணைக்கு அழைத்து நோட்டீஸ் அனுப்பும் வரை செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது என உத்தரவு பிறப்பித்தார். அதே சமயம் ஓரிரு நாளில் முன் ஜாமீன் வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.
    Next Story
    ×