என் மலர்

  செய்திகள்

  கொரோனா வைரஸ்
  X
  கொரோனா வைரஸ்

  தமிழ்நாட்டில் 7 ஆயிரம் பேருக்கு ‘கொரோனா’ வைரஸ் பரிசோதனை- யாருக்கும் பாதிப்பு இல்லை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொரோனா வைரஸ் பாதிப்புக்குப் பிறகு பல்வேறு நாடுகளில் இருந்து இதுவரை 7 ஆயிரம் பேர் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளனர். இவர்களின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்ததில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை.
  சென்னை:

  சீனாவை புரட்டி எடுக்கும் கொரோனா வைரஸ், உலக நாடுகளையும் கதி கலங்க வைத்துள்ளது.

  சீனா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் மூலம் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. வெளிநாட்டு பயணிகளுக்கு விமான நிலையங்களில் மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது.

  தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. இங்கு பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் வந்து செல்கின்றன. கொரோனா வைரஸ் பாதிப்புக்குப் பிறகு பல்வேறு நாடுகளில் இருந்து இதுவரை 7 ஆயிரம் பயணிகள் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளனர்.

  தமிழ்நாட்டுக்கு வரும் அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

  கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள சீனாவில் இருந்து 878 பேரும், சிங்கப்பூர் போன்ற நகரங்களில் இருந்து 272 பேரும் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளனர். மொத்தம் உள்ள 1,150 பேரில் 319 பேர் சென்னைக்கும், 72 பேர் கோவைக்கும், 38 பேர் மதுரைக்கும், 50 பேர் திருச்சிக்கும் விமானத்தில் வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

  ராஜீவ்காந்தி மருத்துவமனை

  சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 12 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 8 பேர் சீனர்கள். ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான கேரள மாணவருடன் பயணம் செய்தவர். இவர்கள் யாருக்குமே கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. இவர்களின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்ததில் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

  ஏற்கனவே, தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு 4 பேரின் ரத்த மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த முடிவு இன்னும் வரவில்லை.

  தமிழக அரசு எடுத்துள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கண்காணிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. சீனாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள் அனைவரும் தொடர்ந்து 28 நாட்கள் கண்காணிக்கப்படுகிறார்கள்.

  அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. பின்னர் அவர் கூறியதாவது:-

  ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 8 சீனர்கள் உள்பட 12 பேர் கண்காணிப்பு பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை. இது தவிர வெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்த யாருக்கும் இந்த அறிகுறி இல்லை. ஆலோசனை கூட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

  அரசின் சுகாதாரத்துறை தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் யாரும் பதட்டமோ, பீதியோ அடைய தேவை இல்லை. கொரோனா வைரஸ் பற்றி வதந்திகள் பரவுகின்றன. அதை யாரும் நம்ப வேண்டாம். தினமும் அதிகாரப்பூர்வ தகவல்களை தெளிவாக சுகாதாரத்துறை தருகிறது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×