search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் புகையிலை பொருட்களை விற்ற 34 பேர் மீது வழக்கு

    ராமநாதபுரம் மாவட்டத்தில் புகையிலை பொருட்களை விற்றது தொடர்பாக 34 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பல பெட்டிக்கடைகள், மொத்த சில்லரை, விற்பனை கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மறைமுகமாக விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    மேலும் பள்ளிகள் அருகே பீடி, சிகரெட் விற்பனையும் களைகட்டி நடந்து வந்தது. போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டாலும் விற்பனை தொடர்வதாக அதிகாரிகளே ஆதங்கப்படுகின்றனர்.

    புகையிலைப் பொருள்களால் வாய் புற்றுநோய் ஏற்படும். இளைஞர்களுக்கு நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக்குறைவு ஏற்படும். இது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், வெளிமாநிலங்களிலிருந்து புகையிலைப் பொருள்களை எளிதாக எடுத்து வந்து புகையிலைப் பொருள்களை கடைகளில் விற்பனை செய்தனர். இது குறித்து ஏராளமான புகார்கள் போலீசாருக்கு வந்தன.

    இந்த நிலையில் ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு ராமராஜன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை, பள்ளி அருகில் சிகரெட் விற்பனை செய்த 34 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து புகையிலை மற்றும் சிகரெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    ராமநாதபுரம் சரகத்தில் 4 வழக்குகளும், பரமக்குடியில் 9, கமுதி 4, கீழக்கரை 4, திருவாடானை 7, முதுகுளத்தூர் 6 வழக்கு என மொத்தம் 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
    Next Story
    ×