search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெங்காயம்
    X
    வெங்காயம்

    கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம் விலை மேலும் குறைந்தது

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட வெங்காயம் விலை குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    போரூர்:

    கோயம்பேடு மார்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயமும் திருச்சி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, ராசிபுரம் பகுதி களில் இருந்து சின்ன வெங்காயமும் தினசரி விற்பனைக்கு வருகிறது.

    கடந்த செப்டம்பர் மாதம் பெய்த கனமழை காரணமாக ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலத்தில் வெங்காயம் விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதே போல் தமிழகத்தில் பெய்த கனமழையால் சின்ன வெங்காயம் பயிர்கள் சேதம் அடைந்தன.

    இதன் காரணமாக வெங்காயம் வரத்து குறைந்து விலை திடீரென அதிகரித்தது. மொத்த விற்பனையில் பெரிய வெங்காயம் ரூ. 180-க்கும் சின்ன வெங்காயம் ரூ. 200-க்கும் விற்கப்பட்டது. வெங்காயம் விலை உயர்வால் இல்லத்தரசிகள் பெரிதும் கவலை அடைந்தனர்.

    வெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்தது. மேலும் மொத்த வியாபாரிகள் 10 டன்வரை யிலும், சில்லரை வியாபாரிகள் 5 டன் வரை மட்டுமே வெங்காயம் கையிருப்பு வைத்து கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

    வெங்காயம் பதுக்கலில் ஈடுபடும் வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் எகிப்து, துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது.

    இதைத் தொடர்ந்து வெங்காயத்தின் விலை படிப்படியாகக் குறைய தொடங்கியது. கடந்த வாரம் ரூ. 40-க்கு விற்கப்பட்டு வந்த பெரிய வெங்காயம் வரத்து அதிகம் காரணமாக இன்று விலை மேலும் வீழ்ச்சி அடைந்து ரூ. 32-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் 5 டன் வரை மட்டுமே வந்து கொண்டிருந்த சின்ன வெங்காயமும் தற்போது 50 முதல் 60 டன் வரை வருகிறது. இதன் காரணமாக கடந்த வாரம் கிலோ ரூ. 90-க்கு விற்ற சின்ன வெங்காயம் தற்போது விலை குறைந்து ரூ. 60-க்கு விற்கப்பட்டது.

    வெங்காய விலை குறைவு குறித்து கோயம்பேடு வெங்காயம் மொத்த வியாபாரி சங்க தலைவர் ஜான் வர்த்தா லிஸ் கூறும்போது, ’ கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக 45 முதல் 50 லாரிகளில் மட்டுமே தினசரி வெங்காயம் விற்பனைக்கு வருவது வழக்கம்.

    ஆனால் இன்று ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து 70 லாரிகளில் வெங்காயம் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் காரணமாக விலை குறைந்து உள்ளது’ என்றார்.

    வெங்காயம் விலை தொடர்ந்து குறைந்து வருவது இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தற்போது அதிக அளவில் வெங்காயங்களை வீட்டிற்கு வாங்கி செல்கின்றனர்.

    Next Story
    ×