search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    திருவண்ணாமலை என்ஜீனியருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பா?- தனி வார்டில் சிகிச்சை

    திருவண்ணாமலை என்ஜீனியருக்கு சளி, இருமல் இருந்ததால் கொரோனா வைரஸ் அறிகுறியாக இருக்குமோ என்ற சந்தேகித்த டாக்டர் குழுவினர் அவரை தனி வார்டில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    திருவண்ணாமலை:

    கொரோனா வைரஸ் சீனாவில் வேகமாக பரவி வருகிறது. அங்கு கொரோனா வைரசால் 213 பேர் உயிரிழந்துள்ளனர்.

    சீனாவின் முக்கிய நகரங்களுக்கு விமான போக்குவரத்தை பல நாடுகள் தடை செய்துள்ளது. கொரோனா வைரஸ் அண்டை நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது.

    இதனால் சீனாவில் இருந்து இந்தியா திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் சீனாவில் இருந்து திரும்புபவர்கள் அனைவரையும் சுகாதார துறையினர் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் திருவண்ணாமலையை சேர்ந்த சாப்ட் என்ஜினீயர் ஒருவர் (வயது29). கடந்த 19-ந்தேதி சீனாவில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்தார். அவரை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். அப்போது அவருக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை. இந்தநிலையில் நேற்று இரவு அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு சளி, இருமல் அதிகமானது. இதையடுத்து திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று இரவு அவர் சிகிச்சைக்கு சென்றார். அவரை டாக்டர் குழுவினர் பரிசோதித்தனர்.

    அப்போது அவருக்கு சளி, இருமல் இருந்தது தெரியவந்தது. இதனால் கொரோனா வைரஸ் அறிகுறியாக இருக்குமோ என்ற சந்தேகித்த டாக்டர் குழுவினர் அவரை தனி வார்டில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதுகுறித்து அவருக்கு டாக்டர் குழுவினர் கூறியதாவது:- சீனாவில் இருந்து திருவண்ணாமலை வந்த சாப்ட் என்ஜினீயரை தனி வார்டில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறோம். அவருக்கு சளி, இருமல் உள்ளது. பனி காலத்தில் வருவது போல்தான் இருக்கிறது.கொரோனா வைரசாக இருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் அவருக்கு தனி வார்டில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும் என்றனர்.

    இதேபோல் மருத்துவ மேல் படிப்புக்காக சீனா சென்ற 5 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்க்கும் வகையில் நேற்று திருவண்ணாமலை வந்தனர்.

    திருவண்ணாமலையில் உள்ள 5 பேரையும் சுகாதார துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இருப்பது தெரியவில்லை. இருந்தாலும் தொடர்ந்து அவர்களின் உடல்நிலை குறித்து கண்காணித்து வருகின்றனர்.

    இதுகுறித்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் மீரா கூறியதாவது:-

    சீனாவில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறியோ, பாதிப்போ எதுவுமில்லை. ஆனாலும் அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

    அவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முன் எச்சரிக்கையாக தனி வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் எந்த பாதிப்பும் இல்லை. மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றார்.

    Next Story
    ×