search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செந்தில் பாலாஜி
    X
    செந்தில் பாலாஜி

    தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி வீட்டில் போலீஸ் சோதனை

    கரூரில் திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரரின் வீடுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
    சென்னை:

    ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்த போது 2011-ம் ஆண்டில் இருந்து 2015-ம் ஆண்டு வரையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி.

    கரூரை சேர்ந்த இவர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தினகரனின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வந்தார்.

    பின்னர் தினகரன் கட்சியில் இருந்து விலகி 2018-ம் ஆண்டு தி.மு.க.வில் சேர்ந்தார். அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.

    தற்போது கரூர் மாவட்ட தி.மு.க. செயலாளராக இருக்கும் செந்தில் பாலாஜி தி.மு.க.வில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

    2017-ம் ஆண்டு செந்தில்பாலாஜி, தினகரன் அணியில் இருந்த போது சென்னை அம்பத்தூரை சேர்ந்த கணேஷ்குமார் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார்.

    அதில், “செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 16 பேரிடம் ரூ.95 லட்சம் பணம் வாங்கி ஏமாற்றி விட்டதாக” தெரிவித்து இருந்தார்.

    இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் செந்தில் பாலாஜி மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட சட்ட பிரிவுகளில் வழக்குபதிவு செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை சென்னை மெட்ரோ பாலிட்டன் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி கோர்ட்டில் முன் ஜாமீன் பெற்று உள்ளார்.

    இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். கோர்ட்டில் சிறப்பு அனுமதி பெற்று இந்த சோதனை நடைபெற்றது.

    செந்தில்பாலாஜியின் சென்னை வீடு, கரூரில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றது. அண்ணாநகரில் செந்தில் பாலாஜிக்கு சொந்தமாக வீடு உள்ளது. அங்கு இன்று காலையில் போலீசார் ஒரு குழுவாக சென்று சோதனை நடத்தினர்.

    போலீசார் சோதனை நடத்தி வரும்  கரூர்  உள்ள செந்தில்பாலாஜியின் அலுவலகம் முன்பு தி.மு.க.வினர் திரண்டு நின்ற காட்சி.


    கரூர் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டிற்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 பேர் இன்று காலை சென்றனர்.

    டி.எஸ்.பி. ஒருவர் தலைமையில் செந்தில் பாலாஜியின் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது செந்தில் பாலாஜி வீட்டில் இல்லை.

    திருச்சியில் இன்று நடைபெறும் தி.மு.க. உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்க சென்றிருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    இதையடுத்து செந்தில் பாலாஜியின் தந்தை வேலுச் சாமி, தாயார் பழனியம்மாள் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    கரூரில் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான ஜவுளி ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கும் சென்னை போலீசார் சோதனை நடத்தினார்கள். செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்கின் வீட்டிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

    இந்த சோதனையின் போது போக்குவரத்து துறை மோசடி தொடர்பாக ஆவணங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டது.

    இந்த வழக்கில் தொடர்புடைய தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த மணிமாறன் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்தனர்.

    செந்தில் பாலாஜியின் வீட்டில் போலீசார் சோதனை நடத்துவதை அறிந்ததும் கரூர் மாவட்ட தி.மு.க.வினர் பலர் அவரது வீட்டு முன்பு குவிந்தனர். போலீசாரின் சோதனைக்கு கண்டனம் தெரிவித்து கோ‌ஷங்களை எழுப்பினர்.

    இது பழிவாங்கும செயல் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதையடுத்து செந்தில் பாலாஜி வீட்டு முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட கோவையை சேர்ந்த முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி, சமூக வலை தளங்களில் அ.தி.மு.க. லெட்டர் பேடுடன் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டிருந்தார்.

    இந்த நிலையில் தி.மு.க. எம்.எல்.ஏ.வான செந்தில் பாலாஜி வீட்டில் போலீசார் சோதனை நடத்தியிருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    Next Story
    ×