search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செயின் பறிப்பு
    X
    செயின் பறிப்பு

    அரக்கோணம், திமிரியில் 3 பெண்களிடம் செயின் பறிப்பு

    அரக்கோணம் மற்றும் திமிரியில் வெவ்வேறு சம்பவத்தில் 3 பெண்களிடம் வாலிபர்கள் செயினை பறித்து சென்றனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் சீனிவாச நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 69), ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவரது மனைவி சசிகலா (55). நேற்று இரவு தம்பதி இருவரும் பைக்கில் அரக்கோணத்தில் நடந்த திருமணத்திற்கு சென்றிருந்தனர்.

    அங்கிருந்து இரவு 9.30 மணிக்கு வீட்டுக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.

    முபாரக் நகரில் உள்ள தெருவில் வந்தபோது எதிரே 30 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் பைக்கில் வந்தனர். அவர்கள் சீனிவாசன் பைக்கை மறித்தனர்.

    அப்போது பிரேக் போட்டு நின்றார். அந்த நேரத்தில் சசிகலா அணிந்திருந்த 7 பவுன் கொண்ட 2 செயின்களை வாலிபர்கள் பறித்துக்கொண்டு பைக்கில் வேகமாக சென்று விட்டனர்.

    இதனால் திடுக்கிட்ட சீனிவாசன் சசிகலா இருவரும் கூச்சலிட்டனர். அதிர்ச்சியில் சசிகலா நெஞ்சுவலி ஏற்பட்டு அங்கேயே தரையில் சரிந்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள் சசிலாவுக்கு முதலுதவி அளித்தனர்.

    பின்னர் அவரை மீட்டு அரக்கோணம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    டி.எஸ்.பி. மனோகரன் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் சப்-இன்ஸ்பெக்டர் தேவ பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரக்கோணம் அருகே உள்ள இச்சி புத்தூர் முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுதாகர் மனைவி ஆஷா (25). சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று தணிகை போளூர் சென்றுவிட்டு இரவு 8.30 மணிக்கு இச்சி புத்தூருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அவரை நோட்டமிட்டு பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் ஆஷாவின் பைக்கை முந்தி சென்று பின்னர் அங்கிருந்து திரும்பி அவருக்கு நேர் எதிராக வந்து மோதினர். இதனால் ஆஷா பைக்கில் இருந்து கீழே விழுந்தார்.

    அப்போது பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த வாலிபர் ஆஷா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் செயினை பிடித்து இழுத்தார். சுதாரித்துக்கொண்ட ஆஷா செயினை விடாமல் இரண்டு கைகளால் பிடித்துக் கொண்டார்.

    அப்போது ஒரு பவுன் செயின் அறுந்து வாலிபரின் கையில் சென்றது. இதனால் ஆஷா கூச்சலிட்டார். வாலிபர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஒரு பவுன் நகையுடன் தப்பிச் சென்று விட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஆஷா புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

    இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த செயின் பறிப்பு சம்பவங்களில் ஒரே கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கும்பலை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரக்கோணத்தில் நடந்த இந்த துணிகர சம்பவம் பெண்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஆற்காடு அடுத்த திமிரி அருகே பரதராமியை சேர்ந்தவர் சுமதி (வயது30). திமிரியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திருமண மண்டபத்துக்கு வந்தார். அப்போது பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர் சுமதி கழுத்தில் அணிந்திருந்த 5½ பவுன் செயினை பறித்தனர்.

    சுமதி செயினை பிடித்துக் கொண்டதால் செயின் அறுந்து 4 பவுன் பைக் ஆசாமியிடம் சிக்கிக் கொண்டது. உடனே இருவரும் பைக்கில் தப்பி சென்றனர். சுமதி கத்தி கூச்சலிடுவதற்குள் பைக் ஆசாமிகள் 2 பேரும் தலை மறைவாகி விட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்த திமிரி போலீசார் சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து தப்பியோடிய செயின் பறிப்பு திருடர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×