search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உறவினர்கள் சாலை மறியல் செய்த காட்சி.
    X
    உறவினர்கள் சாலை மறியல் செய்த காட்சி.

    கெலமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி பள்ளி மாணவி பலி

    கெலமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி பள்ளி மாணவி உடல் நசுங்கி உயிரிழந்தாள். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள ஜெ.காருப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாதேவன். இவரது மகள் வனிதா. இவள் ஜெ.காருப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில் 2–ம் வகுப்பு படித்து வந்தாள். மாதேவனின் சகோதரர் சிவண்ணா. இவரது மகள் சவுந்தர்யா (வயது 2). இவள் கெலமங்கலம் பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 2–ம் வகுப்பு படித்து வருகிறாள்.

    நேற்று காலை 7.30 மணி அளவில் சவுந்தர்யாவை அவரது தாத்தா பசப்பா என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்து சென்றார். அப்போது வனிதாவும் உடன் சென்றாள். ஜெ.காருப்பள்ளி கிராமத்தின் அருகே கூட்டுரோடு பகுதியில் சென்றபோது அந்த வழியாக வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.

    இந்த விபத்தில் லாரியின் சக்கரத்தில் சிக்கி மாணவி வனிதா உடல் நசுங்கி சம்பவ இடத்திலே பரிதாபமாக பலியானாள். அதே போல சவுந்தர்யாவும், அவரது தாத்தா பசப்பாவும் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஓசூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே வனிதா விபத்தில் பலியானது குறித்து தகவல் அறிந்ததும் அவளது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் மாணவியின் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் திடீரென அவர்கள் அப்பகுதியில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் இந்த வழியாக செல்லும் லாரிகள் அனைத்தும் மின்னல் வேகத்தில் செல்கின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. மேலும் மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் நேரமான காலை 6 மணி முதல் காலை 10 மணி வரையிலும், பள்ளி முடியும் நேரமான மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் லாரிகளை இப்பகுதியில் இயக்க அனுமதிக்கக்கூடாது என கோரிக்கை வைத்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா, இன்ஸ்பெக்டர் சரவணன், கெலமங்கலம் சப்–இன்ஸ்பெக்டர் செல்வராகவன், தாசில்தார் பாலசுந்தரம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். இதையடுத்து அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த உறவினர்கள் மறியலை கைவிட்டனர்.

    அதன் பின்னர் வனிதாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி பள்ளி மாணவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×