search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ஜெயக்குமார்
    X
    அமைச்சர் ஜெயக்குமார்

    டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை- அமைச்சர் ஜெயக்குமார்

    டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
    சென்னை

    சென்னை ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் ‘உலக சுங்க நாள்’ நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியை அமைச்சர் டி.ஜெயக்குமார் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சுங்கத்துறை தீர்வாணைய துணை தலைவர் சி.பி.ராவ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சுங்கத்துறை முதன்மை கமிஷனர் எம்.எம்.பார்த்திபன், கமிஷனர் சீனிவாச நாயக், இணை கமிஷனர் டி.சமய முரளி, உதவி கமிஷனர் ஒய்.விஜயமூர்த்தி உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் சுங்கத்துறையில் சிறப்பாக பணிபுரிந்த கமிஷனர் என்.பத்மஸ்ரீ, இணை கமிஷனர் ஜெயப்பிரியா, துணை கமிஷனர் கோல்டி சர்மா உள்பட 25 அதிகாரிகளுக்கும், ஏற்றுமதியில் சிறப்பாக செயல்பட்ட பெல் நிறுவனத்துக்கும், இறக்குமதியில் சிறப்பாக செயல்பட்ட கேட்டர்பில்லர் நிறுவனத்துக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    பின்னர் நிகழ்ச்சி முடிந்து ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சுங்கத்துறை சமூகத்துக்கு ஆற்றிவரும் தொண்டு சிறப்பானது. பூமியை பாதுகாக்கும் ஓசோன் அடுக்குக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஆர்-22 என்ற தடை செய்யப்பட்ட கியாசை பல்வேறு நாடுகளில் இருந்தும் கொண்டு வருவார்கள். இதை தடுப்பதில் சுங்கத்துறை பெரும் பங்கு வகிக்கிறது.

    இதேபோல் சமூகத்துக்கு சீர்கேடு விளைவிக்கின்ற கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப்பொருட்களை எந்த வகையிலும் கொண்டுவராத வகையில் துறைமுகம் மற்றும் விமான நிலையத்தை சுங்கத்துறை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு சிறப்பான முறையில் செயலாற்றி வருகிறது.

    சசிகலா குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது அவரது சொந்த கருத்து. அது கட்சியின் கருத்து அல்ல. சசிகலாவும், அவரை சார்ந்தவர்களும் எந்த நிலையிலும் ஆட்சியிலும், கட்சியிலும் பங்கேற்க முடியாது என்று ஏற்கனவே கட்சியில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது கட்சியும், ஆட்சியும் நன்றாக சென்று கொண்டு இருக்கிறது.

    இதே நிலை வருங்காலத்திலும் நீடிக்கும். சசிகலா சிறையில் இருந்தாலும், வெளியில் இருந்தாலும் கட்சிக்கும், ஆட்சிக்கும் எந்த பாதிப்பும் ஏற்படப்போவது இல்லை.

    முக ஸ்டாலின்

    மு.க.ஸ்டாலின் முதலில் அவரது முதுகை திரும்பி பார்த்து எவ்வளவு ஊழல் கறை இருக்கிறது என்று பார்க்க வேண்டும். சர்க்காரியா கமிஷன், பூச்சிமருந்து ஊழல், வீராணம் திட்டத்தில் முறைகேடு, சென்னையில் பாலங்கள் கட்டியதில் முறைகேடு எல்லாம் தி.மு.க. ஆட்சியில் நடைபெற்றது.

    விஞ்ஞானப்பூர்வமாக ஊழல் செய்வதில் அவர்களை விட கில்லாடித்தனமாக யாரும் செய்ய முடியாது. ஊழலுக்காக ஒரு அரசாங்கம் கலைக்கப்பட்டது என்றால் அது தி.மு.க. ஆட்சியில் தான். அந்த கூட்டணியில் இருக்கும் பீட்டர் அல்போன்ஸ் 1996-ல் பாலம் கட்டப்பட்டது குறித்து ‘தி.மு.க. ஆட்சியின் விஞ்ஞானபூர்வ ஊழல்’ என்று எழுதிய புத்தகத்தை மு.க.ஸ்டாலினுக்கு கொடுத்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.

    அகில இந்திய அளவில் 2-ஜி ஊழல் நடத்தினர். பரங்கிமலையை விழுங்கிய மகாதேவனை பார்த்து இருக்கிறோம். ஆனால், இமயமலையை விழுங்கிய மகாதேவன் தி.மு.க. தான்.

    டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை வாங்கி கொடுப்போம். புற்றீசல் போல தென்படும் தனியார் பயிற்சி மையங்கள் அடையாளம் காணப்பட்டு களை எடுக்கும் நடவடிக்கை நிச்சயம் நடக்கும்.

    அண்ணா மேலாண்மை நிலையத்தின் மூலம் குரூப்-4 தேர்வுக்கு அரசு சார்பில் புத்தகங்களை தயார் செய்து பயிற்சி கொடுத்து வருகிறோம்.

    இதே போன்று பொது பயிற்சி மையங்கள் சென்னை, மதுரை, கோவை போன்ற மாநகரங்களில் தொடங்குவதற்கு சட்டமன்றத்தில் அறிவிப்பு செய்யப்பட்டது. அவை நடைமுறைக்கு கொண்டு வரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×