search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
    X
    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

    திமுகவினர் குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்குகின்றனர்- ராஜேந்திர பாலாஜி தாக்கு

    நாங்கள் பாட்டு எழுதி பெயர் வாங்குகிறோம், தி.மு.க.வினர் குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்குகின்றனர் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.

    சிவகாசி:

    சிவகாசி அருகே திருத் தங்கல்லில் நகர அ.தி. மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. சிவனேசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

    தமிழக முதல்வரும் துணை முதல்வரும் தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை கொடுத்து வருகின்றனர். ஏழைஎளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அ.தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது. சிவகாசி ஒன்றியத்தில் இன்னும் சில நாட்களில் சீவலப்பேரி குடிநீர் திட்டத்தை திறந்து வைக்க உள்ளோம்.

    சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்படும். திருத்தங்கல் நகராட்சிக்கு ஏற்கனவே மானூர் குடிநீர் திட்டத்தை நாங்கள்தான் கொண்டு வந்தோம். தற்போது கூடுதலாக புதிய தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    திருத்தங்கல் நகராட்சியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு தள்ளுவண்டியில் பெண்களும் ஆண்களும் இரவுபகல் பார்க்காமல் தண்ணீரை வெகுதூரத்தில் இருந்து சுமந்து வந்தனர்.

    தற்போது அந்த நிலை இல்லை. திருத்தங்கல் நகராட்சிக்கு கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தது யார் என்று நினைத்து பார்க்கவேண்டும். தற்போது நகராட்சிக்கு தேர்தல் வரஉள்ளது. தி.மு.க. ஆட்சி காலத்தில் திருத்தங்கல் நகராட்சிக்கு எந்த திட்டமும் கொண்டு வரவில்லை.

    குடிநீர் மேல்நிலை தொட்டி, வாறுகால், சாலை வசதிகள், புதிய பஸ் நிலையம், அரசு மருத்துவமனை உட்பட அனைத்து திட்டங்களும் செய்து கொடுத்தது அ.தி. மு.க. ஆட்சிதான்.

    மக்களிடம் பொய் சொல்லி ஓட்டுவாங்க தி.மு.க. வினர் நினைக்கின்றனர். நாங்கள் பாட்டு எழுதி பேர் வாங்குகிறோம். திமுகவினர் குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கி விடுகின்றனர். எனவே நாட்டு மக்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

    தேர்தல் வந்தவுடன் தி.மு.க.வினர் அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று சொல்வார்கள். இதற்கு முன்னால் அவர்கள் இருந்த காலத்தில் என்ன செய்தார்கள்? என்று சொல்லச் சொல்லுங்கள்.

    மக்கள் நலத்திட்டங்கள் யார் ஆட்சி காலத்தில் சிறப்பாக செயல்படுத் தப்பட்டது என்று தி.மு.க.வோடு பொதுமேடையில் விவாதிக்க நான் தயாராக உள்ளேன்.

    திருத்தங்கல் நகராட்சியை அ.தி.மு.க. மீண்டும் கைப்பற்றியது என்ற வரலாற்றை நீங்கள் (பொதுமக்கள்) உருவாக்கி கொடுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் வல்லிக்கண்ணன், நிர்வாகிகள் சாந்திசிவனேசன், செல்வம், சேதுராமன், ரவி செல்வம், வசந்தகுமார், தகவல் தொழில்நுட்பட மாவட்ட தலைவர் செல்வம், கூட்டுறவு சங்க தலைவர் ரங்கபாளையம் காசிராஜன், சிவகாசி ஒன்றிய இளைஞரணி செயலாளர் சங்கர், நகர இளைஞரணி செயலாளர் கே.டி.ஆர்.கார்த்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டுறவு சங்கத்தலைவர்கள் ரமணா, கிருஷ்ண மூர்த்தி, நகர அவைத்தலைவர் கோவில்பிள்ளை, மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் சீனிவாசன் மற்றும் முருகன், காளிராஜன், சசிகுமார் நன்றி கூறினர்.

    கூட்டத்துக்கான ஏற்பாடுகளை திருத்தங்கல் நகர செயலாளர் பொன் சக்திவேல் செய்திருந்தார்.

    Next Story
    ×