search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வினோதினிக்கு அண்ணா பதக்கத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
    X
    வினோதினிக்கு அண்ணா பதக்கத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    குடியரசு தின விழா- வீரச்செயல் புரிந்தவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பதக்கம் வழங்கினார்

    பல்வேறு பிரிவுகளில் வீரச்செயல் புரிந்தவர்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதக்கங்களை வழங்கினார்.

    சென்னை:

    நாடு முழுவதும் 71-வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே குடியரசு தின விழா நடைபெற்றது.

    இதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காலை 7.52 மணிக்கு மோட்டார் சைக்கிள்கள் புடை சூழ வந்தார். அவரை தலைமை செயலாளர் சண்முகம் வரவேற்றார்.

    அதன்பிறகு கவர்னர் பன்வாரிலால் புரோகித் காலை 7.54 மணிக்கு வந்தார். அவரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வர வேற்றனர்.

    முப்படை தளபதிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளான டி.ஜி.பி. திரிபாதி, சென்னை போலீஸ் கமி‌ஷனர் விஸ்வநாதன், கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த் முரளி ஆகியோரை கவர்னருக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார்.

    காலை 8 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது விமானப்படை ஹெலிகாப்டர் பறந்து வந்து மலர் தூவியது.

    அங்கு அமைக்கப்பட்டு இருந்த மேடையில் நின்று பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஏற்றுக் கொண்டார்.

    ராணுவப்படை, கடற்படை, விமானப்படை, கடலோர காவல் படை, முன்னாள் ராணுவத்தினர் படைப்பிரிவு, சி.ஆர்.பி.எப்., தமிழ்நாடு சிறப்பு காவல் படை, சென்னை பெருநகர பெண்கள் காவல் படை, நீலகிரி படைப்பிரிவு, கேரளா காவல்படை பிரிவு, குதிரைப்படை, தீயணைப்பு, ஊர்க்காவல் படை உள்ளிட்ட 44 வகையான படைப் பிரிவினர் இதில் அணி வகுத்து வந்தனர்.

    அதன்பிறகு கவர்னர் பன்வாரிலால் புரோகித் விழா மேடைக்கு சென்று அமர்ந்தார்.

    பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீர தீர செயலுக்கான பதக்கங்களை வழங்கினார்.

    பின்னர் பதக்கங்கள் பெற்றவர்களுடன் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

    அதன் பிறகு பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

     

    குடியரசு தினவிழாவில் பெண்கள் கலை நிகழ்ச்சி.

    இதில் சென்னை அயனாவரம் பெத்தேல் மெட்ரிக் பள்ளி, விருகம்பாக்கம் ஜெய்கோபால் கரோடியா அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி, மேத்தா மகளிர் மேல் நிலைப்பள்ளி, ராணிமேரி கல்லூரி, எத்திராஜ் கல்லூரி, வேப்பேரி ஜெயின் கல்லூரிகளை சார்ந்த மாணவிகளின் நடன நிகழ்ச்சிகள், கரகாட்டம், கோலாட்டம், பொய்க்கால் குதிரை, சாமரம் நடனம் நடைபெற்றன.

    அருணாசல பிரதேசம், காஷ்மீர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் கிராமிய கலைநிகழ்ச்சிகளும், மதுரை தப்பாட்டம் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

    பல்வேறு அரசுத்துறைகளின் அலங்கார ஊர்தி அணிவகுப்புகளும் நடைபெற்றன. இதில் செய்தித்துறை, காவல்துறை, வேளாண்மை துறை, ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை, பள்ளிக்கல்வித்துறை, மக்கள் நல்வாழ்வு, குடும்ப நலத்துறை, கைத்தறித்துறை, சுற்றுலாத்துறை, போக்கு வரத்து துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளின் அலங்கார ஊர்திகள் பங்கேற்றன.

    நிகழ்ச்சியில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஷாகி மற்றும் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, கே.பி.அன்பழகன், ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள், நிர்வாகிகள், வெளிநாட்டு தூதர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க மெரினா கடற்கரையின் இருபுறங்களிலும் ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர்.

    அங்கிருந்த காந்திசிலை உள்பட அந்த பகுதி முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. போலீஸ் கண்காணிப்பும் அதிக அளவில் காணப்பட்டது.விமானப்படையை சேர்ந்த ஹெலிகாப்டர்கள் மெரினா பகுதியில் 10 நிமிடத்துக்கு ஒருமுறை பறந்தபடி கண்காணித்தன.

     

    குடியரசு தினவிழா நிகழ்ச்சி.

    சென்னையில் நடந்த குடியரசு தின விழாவின் போது வீரதீர செயலுக்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து பதக்கம் பெற்றவர்கள் விவரம் வருமாறு:-

    1.இரா.ராஜா- நாகை மாவட்ட தீயணைப்பு படை வீரர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ந்தேதி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிவ தர்ஷினி (வயது2½) என்ற பெண் குழந்தையை காப்பாற்றினார்.

    இதற்காக ராஜாவுக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    அவருக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலை, ரூ.5,000 மதிப்புள்ள தங்கமுலாம் பூசிய பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

    2.ஏகேஷ், பிரிஸ்டன் பிராங்ளின், வினித், சார்லிபன், ஈஸ்டர் பிரேம்குமார்- ஆகியோர் ஆட்டோவில் ஒரு பெண் கடத்தப்படுவதை அறிந்து உயிரையும் பொருட்படுத்தாமல் விரட்டிச் சென்று ஆட்டோவை மடக்கி அதில் இருந்த பெண்ணை மீட்டனர்.

    ஆட்டோ டிரைவரையும் போலீசில் பிடித்து கொடுத்தனர். இதற்காக அவர்களுக்கு அண்ணா பதக்கம் கிடைத்தது.

    3. காட்டுப்பாக்கம் தனலட்சுமி - இவர் மளிகை பொருள் வாங்கிவிட்டு வீட்டுக்கு நடந்து சென்ற போது 5 பவுன் தங்கச் சங்கிலியை இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவன் பறிக்க முயன்றான். அதை தடுத்தபோது இவரை கத்தியால் குத்தினான். ஆனாலும் அந்த திருடனை தப்பவிடாமல் பிடித்து போலீஸ் கைது செய்வதற்கு உதவினார். இதற்காக இவருக்கு அண்ணா பதக்கம் கிடைத்தது.

    4.வினோதினி (பம்மது குளம்)- இவர் பணி முடிந்து வீட்டுக்கு செல்லும்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் தங்கச்சங்கிலி, செல்போனை பறிக்க முயன்றபோது அவர்களை கீழே விழவைத்து போலீசாரிடம் பிடித்துக் கொடுத்தார். இதற்காக இவருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.

    5.இந்திரகாந்தி மற்றும் பழனியப்பன் (ஒரத்தநாடு)- இவர்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது 2 திருடர்கள் வீட்டுக்குள் இருந்து வெளியே ஓட முயன்றனர்.

    அவர்கள் தப்பிவிடாமல் இருவரும் போலீசில் பிடித்து கொடுத்தனர். இதற்காக இவர்கள் இருவருக்கும் அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.

    6. இந்த ஆண்டுக்கான கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தாஜ் முகமதுவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இவருக்கு பதக்கமும், ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது.

    7. சந்திரமோகன்- திருப்பூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர். இவர் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தி வெளி மாநிலங்களில் இருந்து சட்ட விரோதமாக கடத்தப்பட்ட எரிசாராயத்தையும் பிடித்து கொடுத்தார். இதற்காக இவருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கம் வழங்கப்பட்டது. மேலும் ரூ.40 ஆயிரத்துக்கான காசோலையும் இவருக்கு கொடுக்கப்பட்டது.

    இதேபோல் திருச்சி மத்திய புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், பண்ருட்டி இன்ஸ்பெக்டர் பூங்கோதை, விழுப்புரம் புலனாய்வு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் அழகிரி, கும்பகோணம் மேற்கு காவல் நிலைய தலைமை காவலர் பார்த்தீப நாதன் ஆகியோருக்கும் காந்தியடிகள் காவலர் பதக்கம் வழங்கப்பட்டது.

    8.சிறந்த காவல் நிலையத்துக்கான முதல்- அமைச்சரின் விருது கோவை நகரத்துக்கு முதல் பரிசும், திண்டுக்கலுக்கு 2-வது பரிசும், தர்மபுரிக்கு 3-வது பரிசும் கிடைத்தது.

    இந்த விருதுகளை இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், உலகநாதன், ரத்தின குமார் பெற்றுக்கொண்டனர்.

    இவர்களுக்கு முதல்- அமைச்சர் கோப்பைகளையும் வழங்கினார்.

    9. யுவக்குமார் (சென்னிமலை பசுவப்பட்டி கிராமம்)- இவர் திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பத்தை கடைபிடித்து அதிக மகசூல் பெற்று சாதனை படைத்தார்.

    இதற்காக இவருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருது அளித்து ரூ.5 லட்சம் மதிப்பிலான பதக்கத்தையும் வழங்கினார்.
    Next Story
    ×