search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் ஆனந்த் ஆய்வு செய்தபோது எடுத்த படம்.
    X
    நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் ஆனந்த் ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

    திருவாரூர் மாவட்டத்தில், இதுவரை 26 ஆயிரம் டன் நெல் கொள்முதல் - கலெக்டர் தகவல்

    திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 26 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் ஆனந்த் கூறினார்.
    திருவாரூர்:

    திருவாரூர் அருகே உள்ள அடியக்கமங்கலத்தில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மாவட்ட கலெக்டர் ஆனந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நெல் கொள்முதல் பதிவேடு, சாக்குகள் இருப்பு பதிவேடு ஆகியவைகளை பார்வையிட்டார். மேலும் நெல் ஈரப்பதம் கண்டறியும் கருவியின் செயல்பாட்டினையும், நெல் மூட்டை எடை எந்திரத்தின் செயல்பாட்டினையும் ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகள் நெல் கொள்முதல் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு வரை தினசரி 800 மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டதை, இந்த ஆண்டு முதல் 1,000 மூட்டைகளாக உயர்த்தி கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளின் ஈரப்பதமான நெல்லினை உலர வைத்து பின்பு கொள்முதல் செய்ய அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் இடவசதி செய்து தரப்பட்டுள்ளது.

    திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 439 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதுவரை 26 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது ஒரு நாளைக்கு 3 ஆயிரத்தில் இருந்து 4 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனை 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் டன் வரை கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களில் புகார் ஏதும் வராத வகையில் கண்காணிக்க முதுநிலை மண்டல மேலாளர், மாவட்ட வருவாய் அலுவலர், தாசில்தார்கள் ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நெல் கொள்முதல் குறித்த புகார் வரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் மணிவண்ணன், உதவி கலெக்டர் ஜெயபிரீத்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×