search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேசி பழனிசாமி
    X
    கேசி பழனிசாமி

    கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமிக்கு பிப். 7வரை நீதிமன்ற காவல்

    கோவையில் இன்று காலை கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிசாமிக்கு பிப்ரவரி 7ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டது.
    கோவை:

    திருப்பூர் புறநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் கே.சி. பழனிசாமி.கோவை ஆர்.எஸ்.புரம் லாலி ரோடு பகுதியில் வசித்து வருகிறார். எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் எம்.எல்.ஏ.வாகவும், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் எம்.பி.யாகவும் இருந்தார்.

    அ.தி.மு.க. 2 அணியாக பிரிந்து ஒன்றாக சேர்ந்த பின்னர் கே.சி.பழனிசாமிக்கு கட்சியில் செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டது. மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிப்போம் என அவர் டி.வி. விவாதத்தில் கருத்து வெளியிட்டதால், கடந்த 16.3.18 அன்று கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

    இதற்கிடையே, சூலூர் அருகே உள்ள முத்துக்கவுண்டன் புதூரை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் கந்தவேல் என்பவர் சூலூர் போலீசில் கே.சி. பழனிசாமி மீது புகார் அளித்தார்.

    கே.சி. பழனிசாமி அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். ஆனால் அவர் தன்னை கட்சியில் இருப்பது போல் சித்தரித்து கட்சி லெட்டர் பேடு, இரட்டைஇலை சின்னம் ஆகியவற்றுடன் சமூக வலை தளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    இதனை தொடர்ந்து கே.சி.பழனிசாமி மீது சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். டி.எஸ்.பி. பாலமுருகன் தலைமையில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட போலீசார் கோவை ஆர்.எஸ்.புரம்லாலி ரோட்டில் உள்ள கே.சி.பழனிசாமி வீட்டிற்கு இன்று சென்றனர்.

    அவரிடம் புகார் தொடர்பாக எடுத்துக்கூறிய போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரது வீட்டில் போலீசார் விசாரித்தனர்.

    அவரை சூலூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார் அவர் மீது 11 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், கோவையில் இன்று கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி சூலூர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, கே.சி.பழனிசாமிக்கு பிப்ரவரி 7ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
    Next Story
    ×