search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது செய்யப்பட்ட மீனாட்சி
    X
    கைது செய்யப்பட்ட மீனாட்சி

    கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கால்வாயில் வீசி கொன்ற பெண் கைது

    விழுப்புரத்தில் கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கால்வாயில் வீசி கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் பூந்தோட்டம் மாரியம்மன் கோவில் அருகே நேற்று இரவு ஒரு பெண் பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை கையில் வைத்துக்கொண்டு அந்த பகுதியில் சுற்றிவந்தார்.

    அப்போது அந்த பெண் திடீரென தனது கையில் இருந்த பச்சிளம் குழந்தையை அங்குள்ள கோலியனூரான் வாய்க்கால் கழிவுநீர் கால்வாயில் வீசினார்.

    அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதைபார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுகுறித்து விழுப்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார்.

    இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி கொண்டிருந்தபோது அந்த பெண்ணும், குழந்தையை வீசிய கழிவுநீர் வாய்க்காலில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

    உடனே போலீசார் பொதுமக்கள் உதவியுடன் அந்த கால்வாயில் இறங்கி குழந்தை மற்றும் அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    அந்த பெண்ணுக்கு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அதில் அவர் காஞ்சிபுரம் மாவட்டம் வாலஜாபாத் காவிரிப்பாக்கம் பகுதியை சேர்ந்த விநாயகம் மனைவி மீனாட்சி(வயது 34) என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் மீனாட்சி விநாயகத்தை காதலித்து 10 ஆண்டுகளுக்கு முன்பு காலித்து திருமணம் செய்து கொண்டார்.

    அவருக்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை பிறந்து இறந்து விட்டது. இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மீனாட்சி அவரது கணவரை விட்டு பிரிந்து கடந்த சில ஆண்டுகளாக சென்னை நுங்கம்பாக்கத்தில் தங்கி கட்டிட வேலை பார்த்து வந்தார். அப்போது மீனாட்சிக்கும் கட்டிட மேற் பார்வையாளருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

    அந்த பழக்கம் கள்ளகாதலாக மாறியது. அதன் பிறகு இருவரும் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டை வாடைக்கு எடுத்து கணவன் -மனைவி போல் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் மீனாட்சி கர்ப்பமானார். இதையறிந்த கட்டிட மேற்பார்வையாளர் மீனாட்சியை கைவிட்டு தலைமறைவாகினார்.

    இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மீனாட்சி விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கோவிலுக்கு செல்ல முடிவு செய்து சென்னை நுங்கம்பாக்கத்தில் இருந்து அரசு பஸ்சில் புறப்பட்டார்.

    திண்டிவனம் அருகே வந்த போது மீனாட்சிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. பஸ்சில் இருந்த பயணிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    அந்த குழந்தை மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கபட்டுள்ளதாக மீனாட்சியிடம் டாக்டர்களிடம் தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மீனாட்சி நோயினால் பாதிக்கபட்ட ஆண் குழந்தையை எப்படி வளர்ப்பது என எண்ணினார்.

    அதன் பின்னர் விழுப்புரம் வந்து குழந்தையை கழிவுநீர் வாய்க்காலில் வீசி தானும் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மீனாட்சியை கைது செய்தனர்.
    Next Story
    ×