search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
    X
    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

    குரூப்-4 தேர்வு மோசடி: முக்கிய குற்றவாளி தலைமறைவு

    குரூப்-4 தேர்வு எழுதியவர்களில் யார்-யாருக்கு பணம் வாங்கிக் கொண்டு உதவி செய்வது என்பதை திட்டம் வகுத்து கொடுத்த முக்கிய குற்றவாளி தலைமறைவானார். அவர் பிடிபட்டால் நடந்த தில்லுமுல்லு அனைத்தும் முழுமையாக தெரிந்து விடும்.
    சென்னை:

    தமிழகத்தில் அரசு பணி இடங்களில் காலியாக உள்ள 3,398 இடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டி.என்.பி.சி. குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது.

    சுமார் 16 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள். தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் மாதம் வெளியானது.

    குரூப்-4 தேர்வில் 24,260 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களில் ராமேசுவரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் மாநில அளவில் முதல் 100 இடங்களை பிடித்தனர். இதுபற்றி ஆய்வு செய்தபோது அந்த 100 பேரில் 39 பேர் வெளி மாவட்டங்களில் இருந்து ராமேசுவரம், கீழக்கரைக்கு வந்து தேர்வு எழுதி இருப்பது தெரிய வந்தது.

    இதனால் குரூப்-4 தேர்வில் மோசடி நடந்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதுபற்றி விசாரணை நடந்த போது குரூப்-4 தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அரசு தேர்வு துறை ஊழியர்கள் மற்றும் இடைத்தரகர்கள் ஒருங்கிணைந்து இந்த மோசடியில் ஈடுபட்டு இருப்பது உறுதியானது.

    ராமேசுவரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் அழியும் மையால் தேர்வு எழுதியதாக தெரிய வந்தது. சுமார் 1 மணி நேரத்துக்குள் அந்த மை அழிந்து விடும். அந்த தேர்வு தாள்களை இடைத்தரகர்கள் வாங்கி சரியான விடை எழுதி பூர்த்தி செய்து கொடுத்துள்ளனர்.

    இதன் மூலம் 39 பேர் குரூப்-4 தேர்வில் முறைகேடாக தேர்ச்சி பெற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதுபற்றி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    விசாரணையில் ராமேசுவரம் தாசில்தார் பார்த்தசாரதி, கீழக்கரை தாசில்தார் வீரராஜ் மற்றும் 13 பேர் இந்த மோசடியில் தொடர்பு கொண்டு இருப்பது தெரிந்தது. போலீசார் நேற்று அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

    அதன் பிறகு பள்ளிக்கல்வி துறை அலுவலக உதவியாளர் ரமேஷ், எரிசக்தி துறை உதவியாளர் திருகுமரன் மற்றும் தேர்வு எழுதிய நிதிஷ்குமார் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பிப்ரவரி 7-ந்தேதி வரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே குரூப்-4 தேர்வில் மோசடி நடந்தது எப்படி என்ற தகவல் அம்பலமாகி உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரிய கண்ணூரைச் சேர்ந்த திருவராஜ் என்பவர் தான் இந்த மோசடி அம்பலமானதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் ஆவார். இவரும் குரூப்-4 தேர்வை எழுதி இருந்தார்.

    இவருக்கு 46 வயது ஆகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியானபோது இவர் தனது ஊரில் உள்ள அரசு இ-சேவை மையத்துக்கு சென்று தான் தேர்ச்சி பெற்று இருப்பதை சரி பார்க்க சென்றார்.

    அங்குள்ள ஊழியரிடம் தனது பதிவு எண்ணை காட்டி கம்ப்யூட்டரில் சரி பார்க்கும்படி தெரிவித்தார்.

    அங்கிருந்த ஊழியர் அந்த பதிவு எண்ணை சரி பார்த்தபோது திருவராஜ் குரூப்-4 தேர்வில் மாநிலத்தில் முதல் நபராக தேர்ச்சி பெற்று இருப்பது தெரிய வந்தது. இதனால் அரசு இ.சேவை ஊழியர் ஆச்சரியம் அடைந்தார். நீங்கள்தான் மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்று இருக்கிறீர்கள் என்று வாழ்த்து கூறி விட்டு திருவராஜ் பற்றி விசாரித்தார்.

    இதை கேட்டதும் திருவராஜுக்கும் கடும் அதிர்ச்சி ஆகி விட்டது. மோசடி செய்து தேர்வு எழுதிய முறைகேடு அம்பலமாகி விடுமோ என்ற பயத்தில் அவர் அங்கிருந்து அவசரம் அவசரமாக வெளியேறி சென்று விட்டார்.

    ஆனால் அரசு இ-சேவை மைய ஊழியர் சமூக வலைதளங்களில் இந்த தகவலை பதிவிட்டார். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் குரூப்-4 தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்று இருப்பதாக தகவல் வெளியிட்டார். அந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில்தான் ராமேசுவரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதிய வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எப்படி முதல் 100 இடங்களுக்குள் வந்தனர் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை ஆரம்பித்து இருந்தனர். அவர்கள் சமூக வலைதளங்களில் திருவராஜ் பற்றி பரவிய தகவலை ஆய்வு செய்தனர்.

    அப்போதுதான் திருவராஜ் உள்பட 39 பேர் முறைகேடாக தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று இருப்பது தெரிய வந்தது. அதன் பிறகு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு குற்றவாளிகளை பிடிப்பது மிக எளிதானது.

    அவர்கள் மூலம் 99 பேர் முறைகேடாக தேர்வு எழுதியது தெரிந்தது. அந்த 99 பேருக்கும் வாழ்நாள் தடைவிதித்து டி.என்.பி.எஸ்.சி. நடவடிக்கை எடுத்துள்ளது.

    பள்ளி கல்வித்துறை, அரசு தேர்வாணைத் துறை உள்பட பல்வேறு துறை ஊழியர்கள், இடைத்தரகர்கள், சில அரசியல்வாதிகள் ஒருங்கிணைந்து இந்த மோசடியை அரங்கேற்றி உள்ளனர். ஆனால் தொடக்கத்திலேயே ராமேசுவரம், கீழக்கரை தேர்வு மையங்கள் தொடர்பாக சந்தேகம் எழுந்ததால் பிரச்சினை உருவானது.

    சி.பி.சி.ஐ.டி போலீசார் மோப்பம் பிடித்துவிட்டதை அறிந்ததும் குற்றவாளிகள் தலைமறைவானார்கள். இந்த மோசடி கும்பலுக்கு சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் ஒருங்கிணைப்பாளர் போல இருந்துள்ளார்.

    அவர்தான் குரூப்-4 தேர்வு எழுதியவர்களில் யார்-யாருக்கு பணம் வாங்கிக் கொண்டு உதவி செய்வது என்பதை திட்டம் வகுத்து கொடுத்துள்ளார். அவர் மூலம்தான் அனைத்து மோசடிகளும் நடந்துள்ளன. தப்பி ஓடி தலைமறைவாகி விட்ட அவர் பிடிபட்டால் குரூப்-4 தேர்வில் நடந்த தில்லுமுல்லு அனைத்தும் முழுமையாக தெரிந்து விடும்.

    அண்ணாநகர் ஜெயக்குமார் தான் தேர்வு எழுதியவர்களிடம் பணம் வசூல் செய்துள்ளார். 99 பேரிடம் அவர் ரூ.9 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை வசூலித்ததாக தெரிகிறது. மொத்தத்தில் இந்த முறைகேடுக்கு 10 கோடி ரூபாய் வரை வசூல் செய்து பணம் கைமாறி உள்ளது.

    பணம்

    இது தொடர்பான தகவல்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். இன்று (சனிக்கிழமை) 2-வது நாளாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சிலர் இந்த மோசடியில் சிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    இந்த மோசடியில் கடலூர் மாவட்ட இடைத்தரகர்கள் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கடலூர் சி.பி.சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் தீபா தலைமையில் போலீசார் உள்ளூர் போலீஸ் படை உதவியுடன் பண்ருட்டி சிறுகிராமம், விருத்தாசலம் ஆகிய பகுதிகளில் அதிரடி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் ஏஜெண்டுகளிடம் தொடர்பு உடையவர்களாக கூறப்படும் 2 பேர் பண்ருட்டி சிறுகிராமம், விருத்தாசலம் ஆகிய பகுதிகளில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீசார் அங்கு விரைந்தனர். அவர்களது வீடுகளிலும் அதிரடி ஆய்வு நடத்தினார்கள். அதன் பின்னர் சி.பி.சி.ஐ.டி போலீசார் 2 பேரை மடக்கி பிடித்தனர்.

    அவர்கள் சென்னையில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் பண்ருட்டி சிறுகிராமத்தை சேர்ந்த இடைத்தரகர் ராஜசேகர், என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். கைதான ராஜசேகர் குரூப்-4 தேர்வில் முதல் 50 இடத்தில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. விருத்தாசலத்திலிருந்து அழைத்து வரப்பட்ட மகாலட்சுமியிடம் இது தொடர்பாக போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுபோல் நெல்லை மாவட்டம் விஜயாபதியை சேர்ந்த இடைத்தரகர் ஐயப்பன் என்பவரை சென்னையில் இன்று போலீசார் கைது செய்தனர். அவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

    குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக இடைத்தரகர்களிடம் நடத்திய விசாரணையில் மேலும் பல தகவல்கள் கிடைத்தன. இதன் அடிப்படையில் கடலூர், சிவகங்கை, தஞ்சை, நெல்லை, விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த மாவட்டங்களில் தேர்வு எழுதியவர்கள், இடைத்தரகர்கள் என சந்தேகப்படுவோரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் மேலும் சிலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×