search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை தொடர்ந்து எதிர்ப்போம்- மு.க.ஸ்டாலின்

    5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை தொடர்ந்து நாங்கள் எதிர்ப்போம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
    சென்னை:

    அண்ணா அறிவாலயத்தில் அனைத்து கட்சி கூட்டம் முடிந்ததும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களை சந்தித்தார்.

    இன்றைய அனைத்துக் கட்சி கூட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது. அனைத்து மக்களையும் பாதிக்கக்கூடிய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.

    தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கக்கூடிய எந்த முயற்சியையும் எடுக்க கூடாது. தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணியை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என்கிற தீர்மானங்களை நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம்.

    அதற்காக தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய மக்களை சந்தித்து, ஒரு மாபெரும் கையெழுத்து இயக்கத்தை நடத்துவது என்று முடிவு செய்திருக்கிறோம்.

    இந்த கையெழுத்து இயக்கத்தை வருகிற பிப்ரவரி 2-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை நடத்தி பொதுமக்களிடம் கையெழுத்துக்களை முழுமையாக பெற்று ஜனாதிபதியை நேரடியாக சந்தித்து வழங்குவது என்று முடிவு செய்திருக்கிறோம்.

    இந்த கையெழுத்து இயக்கத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், கிளை ஊராட்சி பகுதிகளில் உள்ள மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பங்கேற்பார்கள்.

    கட்சிக்கு அப்பாற்பட்ட பொதுமக்கள், மாணவர்கள், வணிகர்களும் இதற்கு ஆதரவு தர வேண்டும்.

    அமித்ஷா

    கேள்வி:- குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வாய்ப்பே இல்லை என்று மத்திய மந்திரி அமித்ஷா கூறி இருக்கிறாரே?

    பதில்:- அவர் சொல்வதை சொல்லிக் கொண்டிருக்கிறார். நாங்கள் எங்கள் எதிர்ப்பை தொடர்ந்து தெரிவித்து வருகிறோம்.

    கேள்வி:- உங்கள் கையெழுத்து இயக்கத்தால் தீர்வு கிடைக்கும் என்று நினைக்கிறீர்களா?

    பதில்:- தீர்வு கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். அதற்கான முயற்சியில்தான் ஈடுபட்டுள்ளோம்.

    கேள்வி:- நீங்கள் ஜனாதிபதியை நேரில் சந்தித்து கொடுப்பீர்களா?

    பதில்:- ஜனாதிபதியிடம் முறையாக தேதியை பெற்று நிச்சயமாக பார்ப்போம்.

    கேள்வி:- செங்கல்பட்டில் பெரியார் சிலை உடைக்கப்பட்டிருக்கிறதே?

    பதில்:- தொடர்ந்து இது நடந்து கொண்டிருக்கிறது. இது கண்டிக்கப்பட வேண்டியது. 95 ஆண்டு காலம் தமிழினத்துக்காக குரல் கொடுத்த தந்தை பெரியார் சிலையை இழிவுபடுத்துவது என்பது வெட்கப்பட வேண்டியது, வேதனைப்பட வேண்டிய ஒன்றாகும். அதற்குரிய நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் எடுக்க வேண்டும்.

    கேள்வி:- பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்காக கவர்னரை நீங்கள் சந்திப்பீர்களா?

    பதில்:- 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவையே தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைத்துள்ளது.

    இப்போது உச்சநீதிமன்றம் அது என்ன நிலையில் உள்ளது என்று கேள்வி எழுப்பி உள்ளது. இது மகிழ்ச்சியை தரக்கூடிய செய்தியாக உள்ளது. இப்போதாவது இந்த அரசு கவர்னரை வலியுறுத்துமா? என்று எதிர்பார்க்கிறோம்.

    கேள்வி:- நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறதே?

    பதில்:- இங்குள்ள அரசு ஒரு இரட்டை வேட நாடகத்தை நடத்தி கொண்டிருக்கிறது. நீட் தேர்வை அனுமதிக்க மாட்டோம் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் அவர்களது பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றியதோடு தேர்தல் அறிக்கையிலும் சொல்லி உள்ளனர்.

    சட்டமன்றத்திலும் 2 முறை அதற்கான மசோதா நிறைவேற்றி மத்திய அரசுக்கும், ஜனாதிபதிக்கும் அனுப்பி வைத்தனர். இப்போது தும்பை விட்டு வாலை பிடிப்பது போல் நீதிமன்றத்துக்கு போய் ஒரு நாடகத்தை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.

    கேள்வி:- 5-ம்வகுப்பு, 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளதே? தி.மு.க. இதை எதிர்க்குமா?

    பதில்:- நாங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துதான் வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×